பெர்சே 3.0 தொடர்பில் அன்வார், அஸ்மின் மீது குற்றம் சாட்டப்படும்

பெர்சே 3.0 பேரணி தொடர்பில் பிகேஆர் கட்சியின் இரண்டு மூத்த தலைவர்களான அன்வார் இப்ராஹிம், அஸ்மின் அலி மீது நாளை நீதிமன்றத்தில்  குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்கள் குற்றவியல் சட்டத்தின் 188வது பிரிவை (அது 109வது பிரிவுடனும் அதே சட்டத்தின் 34வது பகுதியும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டும்) “மீறியதாக அவர்களுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

அந்த 188வது பிரிவு “அரசாங்க ஊழியர் ஒருவர் பிரகடனம் செய்த ஆணைக்கு கீழ்படியாதது” சம்பந்தப்பட்டதாகும்.

அதே வேளையில் 109வது பிரிவும் 34வது பகுதியும் உடந்தையாக இருந்தது சம்பந்தப்பட்டதாகும்.

அன்வாரும் அஸ்மினும் இன்னும் தலைமறைவாக இருக்கும் ஐவருடன் இணைந்து ஏப்ரல் 26ம் தேதி மாஜிஸ்திரேட் ஸாக்கி அஷ்ராப் ஜுபிர் பிறப்பித்த நீதிமன்ற ஆணையை மீறுவதற்கு ஆர் தங்கம் ஜி ராஜேஷ் குமார், பார்ஹான் இப்ராஹிம் அல்லது அலியாஸ் ஆகியோருக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த நோட்டீஸ் மேலும் குறிப்பிடுகிறது.

டாத்தாரான் மெர்தேக்காவை சுற்றிலும் போடப்பட்டிருந்த தடுப்பை மீறுவதற்கு தங்கம், ராஜேஷ் குமார், பார்ஹான் ஆகியோருக்கு உடந்தையாக இருந்தததாகவும் அவர்களைத் தூண்டி விட்டதாகவும் அஸ்மின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவ்வாறு தடையை மீறுவது அந்தப் பகுதியில் கலவரத்தை அல்லது கைக்கலப்பை தோற்றுவித்திருக்கலாம் என்றும் அந்த நோட்டீசில் குறிக்கப்பட்டுள்ளது.

இன்னொரு நோட்டீஸில் ஸாக்கி அஸ்ராப்-பின் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஆட்சேபம் தெரிவிக்கும் நோக்கத்துடன் அவர்கள் இருவரும் சாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அது 2012ம் ஆண்டுக்கான அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் 4(2) பிரிவின் கீழ் குற்றமாகக் கருதப்பட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.

அண்மையில் நிறைவேற்றப்பட்ட 2012ம் ஆண்டுக்கான அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படும் முதலாவது நபர்களாகும்.

அது போன்ற நோட்டீஸைப் பெற்றுள்ள இன்னொரு முக்கியப் பிரமுகர் நெகிரி செம்பிலான் பிகேஆர் போராட்டக்காரரான பத்ருல் ஹிஷாம் ஷாஹ்ரின் ஆவார்.

இந்தச் செய்தி எழுதப்பட்ட நேரம் வரையில் அந்த நோட்டீஸின் விவரங்கள் தெரியவில்லை. என்றாலும் தடைகள் முதலில் மீறப்படுவதற்கு சில வினாடிகள் முன்னர் அன்வாருக்கும் அஸ்மினுக்கும் இடையில் பரிவர்த்தனை செய்து கொள்ளப்பட்டதாக கூறப்படும் கை சமிக்ஞைகள் சம்பந்தப்பட்டதாக அது இருக்கும் எனக் கருதப்படுகிறது.

அந்த நேரத்தில் பத்ருல் ஹிஷாம் அன்வாருக்கு பின்னால் நின்று கொண்டிருந்தார்.

இதனிடையே அன்வார், அஸ்மின், செகுபார்ட் என அறியப்படும் பத்ருல் ஹிஷாம் மீது மட்டுமே நாளை குற்றம் சாட்டப்படும் என்பதை சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்தின் வழக்கு தொடரும் பிரிவின் தலைவர் துன் அப்துல் மஜித் துன் ஹம்சா உறுதிப்படுத்தியுள்ளார்.