பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், துணைத் தலைவர் அஸ்மின் அலி மற்றும் கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் பாட்ருல் ஹிசாம் ஷஹாரின் ஆகியோர் மீது அமைதியாகக் கூடுதல் சட்ட விதிகளை மீறினர் என்று கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகின்றனர்.
கோலாலம்பூர், ஜாலான் டூத்தா பகுதிகள் போலீசாரால் சுற்றிவலைக்கப்பட்டுள்ளது.
அன்வார் தமது துணைவியாருடன் காலை மணி 9.15 க்கு செசன்ஸ் நீதிமன்றம் 5 க்கு வந்தார். அவர்களுடன் டிஎபி தலைவர் லிம் கிட் சியாங் மற்றும் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் முகமட் ஹத்தா ரமலி ஆகியோரும் காணப்பட்டனர்.
அமைதியாகக் கூடுதல் சட்டத்தின் கீழ் முதன்முதலாக குற்றம்சாட்டப்படுவர் அம்மூவருமே. அவர்களில் அன்வார் மற்றும் அஸ்மின் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் அவர்கள் தங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பர்.
அவர்கள் மீது அச்சட்டத்தின்கீழ் ரிம10,000 அபராதம் விதிக்கப்படலாம். அந்நிலையிலும் அவர்கள் தங்களுடைய பதவியை இழக்க நேரிடும்.
கோலாலம்பூர் மேஜிஸ்ரேட் ஏப்ரல் 26 விடுத்த ஆணையை மீறி டத்தாரான் மெர்டேக்கா எல்லையையொட்டிய ஜாலான் சுல்தான் ஹிசாமுடின், ஜாலான் ராஜா மற்றும் ஜாலான் கிளப் ஆகிய இடங்களில் கூடியதற்காக அமைதியாகக் கூடுதல் சட்ட விதி 4 (2) (c) இன் கீழ் குற்றம் சாட்டப்படுகின்றனர்.
அவர்கள் மூவரு அக்குற்றத்தை ஏப்ரல் 28 இல் பிற்பகல் மணி 2.30 க்கும் 3.00 க்கும் இடையில் புரிந்ததாக கூறப்படுகிறது.
(மேல் விபரம் பின்னர்)