ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த பெர்சே 3.0 ஆர்ப்பாட்டம் ஏற்படுத்திய குழப்பம், பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு முன்னால் நடத்தப்பட்ட பேர்கர் கடை, பின் புறத்தைக் காட்டும் உடற்பயிற்சி ஆகியவற்றைக் காட்டிலும் மோசமானது என பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி கூறுகிறார்.
“நீங்கள் ஒப்பு நோக்கினால் டாத்தாரான் மெர்தேக்காவில் அம்பிகாவின் கூட்டம் மிக மோசமானது.”
“அம்பிகா வீட்டுக்கு முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களினால் ஏற்பட்ட பாதிப்பு குறைவானது. காரணம் அந்த இடத்தை சிறிய எண்ணிக்கையிலான ஆர்ப்பாட்டக்காரர்களே ஆக்கிரமித்துக் கொண்டனர்,” என இப்ராஹிம் இன்று கோலாலம்பூரில் நிருபர்களிடம் கூறினார்.
“அங்கு நடந்ததை நான் ஒப்புக் கொள்கிறேன் என பொருள் கொள்ளக் கூடாது. மாறாக டாத்தாரானில் நடத்தப்பட்ட அம்பிகா ஆர்ப்பாட்டத்துடன் ஒப்பிடுகையில் அது முழுக்க முழுக்க மாறுபட்டது. ஆனால் அது அம்பிகாவுக்கு உதவியுள்ளது என நான் நம்புகிறேன்.”
“அவர் காரில் தொலை தூரம் செல்ல வேண்டியதில்லை. அவருக்கு பேர்கர் வேண்டுமானால் அவர் தமது வீட்டுக்கு வெளியில் வந்து அதனை வாங்கினால் போதும்.”
டாத்தாரான் மெர்தேக்காவைச் சுற்றிலும் கூடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்த போதிலும் பெர்சே 3.0 பேரணியை அம்பிகா நடத்தியதற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் பொருட்டு பேர்கர், உடற்பயிற்சி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதை இப்ராஹிம் ஒப்புக் கொண்டார்.