தைப்பிங்கை நினைக்காதே: பிபிபி-க்கு கெராக்கான் எச்சரிக்கை

தைப்பிங்கில் பிபிபி மூன்றாம் தடவையாக போட்டியிட இடமளிக்கப்போவதில்லை என்று பேராக் கெராக்கான் கூறுகிறது.

அதன் தலைவர் சாங் கோ யோவ்ன், தைப்பிங் பிபிபிக்கு உரிய தொகுதி அல்ல என்றார். 2004-இல் அப்போதைய பிஎன் தலைவர் அப்துல்லா அஹ்மட் படாவி கேட்டுக்கொண்டதன்பேரில் கெராக்கான் தைப்பிங்கை பிபிபிக்கு “இரவல் கொடுத்தது” என்றாரவர்.

அந்த ஒரு தடவை மட்டும் பிபிபி அங்கு போட்டியிட இடமளிப்பது என்றும் 2008-இல்  அது கெராக்கானுக்குத் திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் ஏற்பாடு செய்துகொள்ளப்பட்டது.

“ஆனால், கடைசி நேரத்தில் பிஎன் உணர்வுடன் கெராக்கான் தைப்பிங்கை பிபிபிக்கு விட்டுக் கொடுக்க ஒப்புக்கொண்டது. அதற்குப் பதிலாக அம்னோவின் தொகுதியான கிரிக் கெராக்கானுக்குக் கொடுக்கப்பட்டது.

“அப்படி ஓர் ஏற்பாடு செய்துகொள்வது அதுவே கடைசி முறையாக இருக்கும் என்று எல்லாக் கட்சிகளும் ஒப்புக்கொண்டன”, என்று சாங் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

எனவே, இப்போது தைப்பிங்கில் போட்டியிடும் உரிமைக்காக “போராடுவேன்” என்று பிபிபி தலைவர் கேவியஸ் கூறுவது  “அர்த்தமற்றது” அடிப்படையற்றது என்றார்.

தைப்பிங் தொகுதி கெராக்கானுக்கு உரியது என்று கூறிய சாங்,1974-இலிருந்து அது கெராக்கானின் கோட்டையாக விளங்கியதையும் கேவியசுக்கு நினைவுறுத்தினார்.

நேற்று, கெடா, சுங்கை பட்டாணியில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட கேவியஸ் எதிர்வரும் தேர்தலில் பிபிபி ஆறு நாடாளுமன்ற இடங்களிலும் 14 சட்டமன்ற இடங்களிலும் களமிறங்க எண்ணம் கொண்டிருப்பதாக அறிவித்தார்.அதாவது 2008 பொதுத் தேர்தலில் போட்டியிட்டதைவிட கூடுதலாக ஒரு நாடாளுமன்ற தொகுதியிலும் இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் அது போட்டியிட விரும்புகிறது.

2004-இல், 1974-க்குப் பின்னர் பிபிபி முதல்முறையாக ஒரு நாடாளுமன்றத் தொகுதியை வென்றது.கேவியஸ்தான் அதை வென்றார்.ஆனால், கடந்த தேர்தலில் அக்கட்சி எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை.

 

 

TAGS: