பிகேஆர் தலைவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது சுஹாக்காம் விசாரணையை முறியடிக்கும் முயற்சியா ?

பெர்சே 3.0 பேரணி தொடர்பில் மூத்த பிகேஆர் தலைவர்கள் மீது அரசாங்கம் வழக்குப் போட்டுள்ளது, சுயேச்சையான விசாரணைகளை முறியடிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

“அந்த முக்கியமான விவகாரம் மீது சுயேச்சையான, பாகுபாடற்ற, முழுமையான விசாரணைகள் மெற்கொள்ளப்படுவதை முன் கூட்டியே தவிர்க்கும்” நோக்கத்தை அந்த சட்ட நடவடிக்கை கொண்டுள்ளதா என டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கேள்வி எழுப்பினார்.

பெர்சே 3.0 பேரணி தொடர்பில் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், துணைத் தலைவர் அஸ்மின் அலி, மத்திய தலைமைத்துவ மன்ற உறுப்பினர் பத்ருல் ஹிஷாம் ஷாஹ்ரின் ஆகியோர் மீது இன்று குற்றம் சாட்டப்பட்டது.

புத்ராஜெயா அமைத்துள்ள சுயேச்சைக் குழுவின் விசாரணைக்காக காத்திருக்காமல் பேரணியின் போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் அத்துமீறல்களை விசாரிப்பதற்கு சுஹாக்காம் எனப்படும் மலேசிய மனித உரிமை ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கையை லிம் வரவேற்றார்.

அந்தச் சுயேச்சைக் குழுவுக்கு முன்னாள் தேசிய போலீஸ் படைத் தலைவர் ஹனீப் ஒமார் தலைமை ஏற்றுள்ளார். அந்தக் குழுவின் பணிகள் இன்னும் தொடங்கவில்லை.

சுஹாக்காம் முழுமையான விரிவான விசாரணையை நடத்துவதற்கு அந்த மூவர் மீதும் வழக்குப் போடப்பட்டிருப்பது தடையாக இருக்கலாம் என லிம் கருதுகிறார்.

நீதிமன்றம் ஒன்றில் சமர்பிக்கப்பட்டுள்ள விவகாரங்களை சுஹாக்காம் விசாரிப்பதற்கு 1999ம் ஆண்டுக்கான மலேசிய மனித உரிமை ஆணையச் சட்டத்தின் “ஆணையத்தின் விசாரணை அதிகாரங்கள்” பிரிவின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டாத்தாரான் மெர்தேக்காவில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புக்கள் “மீறப்பட்டது” மீது சுஹாக்காம் சுயேச்சையான பாகுபாடு இல்லாத விசாரணையை நடத்துவதை முன் கூட்டியே தடுக்கும் பொருட்டு அந்த மூவர் மீதும் குற்றம் சாட்டுவது என திடீரென முடிவு செய்யப்பட்டதா என லிம் வினவினார்.

அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு ஏப்ரல் 28 பேரணியின் போது போலீஸ்காரர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படும் வன்முறைகள் பற்றி முழுமையான விசாரணை நடத்துவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அளித்துள்ள வாக்குறுதிக்கு முரணாகவும் இருப்பதாகவும் லிம் சொன்னார்.

 

TAGS: