நஜிப், 15வது மலேசியா புருணை ஆண்டு கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் புருணை சுல்தான் சுல்தான் ஹசானால் போல்கியாவுடன் 15வது ஆண்டு கலந்துரையாடல் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

புருணையில் அந்தக் கூட்டம் நிகழ்கிறது. பிரதமருடன் அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும் செல்கிறார்.

வெளியுறவு அமைச்சர் அனீபா அமான், பல அமைச்சர்கள், சபா முதலமைச்சர் மூசா அமான், சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட் ஆகியோர் பிரதமர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

வெளியுறவு அமைச்சு விடுத்த அறிக்கை அந்த விவரங்களைத் தெரிவித்தது.

“மலேசியாவுக்கும் புருணைக்கும் இடையில் பங்காளித்துவத்தையும் உறவுகளையும் மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கு வழி வகைகளைக் காண்பதற்கும் ஒப்பந்தங்களை செய்து கொள்வதற்கும் அந்த ஆண்டுக் கலந்துரையாடல் நல்ல வாய்ப்பை வழங்குகிறது,” என அந்த அறிக்கை குறிப்பிட்டது.

கூட்டத்திற்குப் பின்னர் நஜிப்பும் சுல்தான் ஹசானால் போல்கியாவும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரவாக்கில் உள்ள லிம்பாங்கையும் புருணையில் உள்ள தெம்புரோங்கையும் இணைக்கும் சுங்கை பாண்டுரான் பாலத்தை நிர்மாணிக்கும் உடன்பாடு கையெழுத்திடப்படுவதை இரண்டு தலைவர்களும் பார்வையிடுவர்.

சரவாக்-புருணை, சபா-புருணை, பெட்ரோனாஸ்-பெட்ரோலியம் புருணை ஆகியவற்றுக்கு இடையில் பொருளாதார  முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுவதையும் அவர்கள் காண்பர்.

-பெர்னாமா

TAGS: