பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன், தமது வீட்டுக்கு வெளியில் கடைகளை அமைப்பதற்கு பெர்சே எதிர்ப்பாளர்கள் போட்ட குறியீடுகளை சாயம் பூசி அழித்த கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற(டிபிகேஎல்) அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். அத்துடன் அந்த அதிகாரிகளும் போலீசாரும் தொடர்ந்து அங்கு இருந்து வருகின்றனர்.
“டிபிகேஎல் அதிகாரிகள் அங்கு இடை விடாமல் இருந்து வருகின்றனர். போலீசாரும் அவ்வாறே செய்கின்றனர். இந்த அளவு பாதுகாப்பு வழங்கிய அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார் அவர்.
தூய்மையான நியாயமான தேர்தல்களுக்கான பெர்சே போராட்டம் மீது பொது மக்கள் கவனம் திரும்ப வேண்டும் எனத் தாம் விரும்புவதாக அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
தம்மைக் குறை கூறுகின்றவர்கள் அந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் அம்பிகா கேட்டுக் கொண்டார்.
அவர் இன்று புக்கிட் டமன்சாராவில் உள்ள தமது இல்லத்துக்கு வருகை அளித்த பக்காத்தான் ராக்யாட் பேராளர்களிடம் அவர் பேசினார்.
தேர்தல் சீர்திருத்தங்களுக்கு ஆதரவான பெர்சே பேரணிக்கு எதிராக கடந்த இரண்டு வாரங்களாக அம்பிகா வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அண்மையில் அந்தப் பேரணி காரணமாக தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறிக் கொண்ட கோலாலம்பூர் சிறு வணிகர் நடவடிக்கை மன்றம் அவரது வீட்டுக்கு முன்னால் கடைகளுக்கான இடங்களைக் குறியிட்டு அவற்றை விற்பனையும் செய்துள்ளது.
அது போட்ட மஞ்சள் குறிகள் மீது இப்போது கறுப்புச் சாயம் பூசப்பட்டுள்ளது