பெர்சே, தனது கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் “மிரட்டப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும்” முடிவுக்கு வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.
அந்த வகையில் அவருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்தையும் தேசியப் போலீஸ் படைத் தலைவரையும் அது வலியுறுத்தியது.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் அத்தகைய ஆர்ப்பாட்டங்களுக்கு மறைமுகமாக அங்கீகாரம் அளிக்கப்படுவதாகக் கருதப்படும் என பெர்சே கூட்டுத் தலைவர் ஏ சமாட் சைட், அவ்விரு தரப்புக்களுக்கும் தனித்தனியாக எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் தீர்வு காணவும் டிபிகேஎல்-லும் ஐஜிபி-யும் தவறியுள்ளது; அந்த நடவடிக்கைகளுக்கு கொடுக்கப்படும் அங்கீகாரம் எனக் கருதப்படக் கூடும் என நாங்கள் மிகவும் கவலை கொள்கிறோம்,” என்று அந்த கடிதங்களில் எழுதப்பட்டுள்ளது.
ஐஜிபி-க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கடந்த வாரம் மலாக்கா மெர்லிமாவில் நிகழ்ந்த சம்பவத்தையும் சமாட் எடுத்துக் காட்டியுள்ளார்.
அந்தச் சம்பவத்தில் அம்பிகாவுக்காக நடத்தப்பட்ட அந்த நிகழ்வின் போது இரண்டு டிஏபி சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கற்களும் முட்டைகளும் வீசப்பட்டன.
“அந்தச் சம்பவம் அம்பிகாவை நோக்கமாகக் கொண்ட அச்சுறுத்தல், கிரிமினல் மருட்டல் நடவடிக்கை என்பது வெள்ளிடை மலையாகும். அது அம்பிகாவின் பாதுகாப்புக்கு உண்மையான மருட்டலை ஏற்படுத்தியுள்ளது,” என்றார் அவர்.