பாஸ் கட்சி, ‘father of kafir’ செய்தி தொடர்பில் NST-க்கு முன்பு ஆர்ப்பாட்டம் செய்யும்

நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் நாளேடு, பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவர் நிக் அஜிஸ் நிக் மாட்-டை ‘father of kafir’ ( மத நம்பிக்கையற்றவர்களின் தந்தை) என அழைத்து வெளியிட்ட செய்தி தொடர்பில் அதற்கு அழுத்தம் கொடுக்கும் பொருட்டு பாஸ் இளைஞர் பிரிவு பங்சாரில் உள்ள அந்த ஆங்கில மொழி நாளேட்டின் தலைமையகத்திற்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்யவிருக்கிறது.

அந்தச் செய்தியை மீட்டுக் கொள்ளவும் மன்னிப்புக் கேட்கவும் அம்னோவுடன் தொடர்புடைய அந்த நாளேடு தவறியதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டதாக பாஸ் இளைஞர் பிரிவுச் செயலாளர்  கருக் பைசி அகமட் கமில் கூறினார்.

பங்சாரில் உள்ள Saidina Abu Bakar பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்ற பின்னர் அந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

நிக் அஜிஸ் அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருக்க விரும்பும் ‘இன்னொரு அரசியல் விலங்கு’ என முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் அப்துல் ரஹிம் நூர் கூறியதாக மேற்கோள் காட்டி மே 8-ம் தேதி என்எஸ்டி செய்தி வெளியிட்டிருந்தது.

“நிக் அஜிஸை ‘father of kafir’ ( மத நம்பிக்கையற்றவர்களின் தந்தை) என முத்திரை குத்துவதை பாஸ் கட்சிக்கும் அதன் போராட்டத்துக்கும் ஏற்பட்ட அவமானமாக பாஸ் இளைஞர் பிரிவு கருதுகிறது,” கைருல் பைசி வெளியிட்ட அறிக்கை கூறியது.

என்எஸ்டி நிர்வாகத்தைச் சந்திப்பதற்கு இளைஞர் பிரிவு பெரு முயற்சி செய்தது. ஆனால் அது, என்எஸ்டி-யின் மாநில அலுவலகங்களுக்கு முன்பு பாஸ் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்த பின்னரும் கூட அந்த அறிக்கையை மீட்டுக் கொள்ளவும் மன்னிப்புக் கேட்கவும் மறுத்து விட்டது என்றார் அவர்.

“ஆகவே ஒவ்வொரு பாஸ் உறுப்பினரும் என்எஸ்டி-யின் அறிக்கையில் அடங்கியுள்ள நாகரீகமற்ற போக்கையும் மன்னிப்புக் கேட்க மறுக்கும் அதன் பிடிவாதத்தையும் கண்டிக்கும் அந்த ஆட்சேபக் கூட்டத்தில் கொள்ள வேண்டும்,” என்றார் கைருல் பைசி.

 

TAGS: