பெர்சே 3.0பேரணியின்போது கண்ணீர்-புகைக் குண்டால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஒருவர், இன்னும் ஆறு மாதங்களில் கண்ணை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளார்.
கப்பாளா பத்தாசைச் சேர்ந்த அஸ்ருல் வாடி அஹ்மட்டின் பார்வை இன்னும் ஆறு மாதங்களில் மேம்படவில்லை என்றால் அவர் பார்வையை இழக்கலாம் என அவரைப் பரிசோதித்த நான்கு மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
ஏப்ரல் 28-இல், மஸ்ஜித் ஜாமெக் அருகில் பெர்சே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டபோது கண்ணீர்-புகைக் குண்டு ஒன்று நேரடியாக தம் முகத்தைத் தாக்கியதாக அஸ்ருல் கூறினார்.
அச்சம்பவத்தைப் படம்பிடித்த பொதுமக்களில் ஒருவர் அதை அப்படியே யுடியுப்பிலும் பதிவேற்றியுள்ளார்.
“அத்தாக்குதலால் வலக் கண்ணின் பார்வை போயிற்று.அதில் எல்லாமே கருப்பாகத்தான் தெரிகிறது.அது ஒரு பொருள் வேகமாகக் கண்ணைத் தாக்கியதன் விளைவு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்”, என அஸ்ருல் பினாங்கில் செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார்.
அஸ்ருல் கண்ணீர்-புகைக் குண்டு தாக்கியதும் கீழே விழுந்து விட்டார்.அங்கிருந்த பொதுமக்கள் அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.அங்கு அவரின் கண்களுக்கு அடியில் ஒன்பது தையல்கள் போடப்பட்டன.
பேரணியில் கலந்துகொண்டதை எண்ணி வருத்தப்படுகிறாரா என்று வினவியதற்கு, “இல்லை, இது மக்கள் போராட்டம்”, என்றாரவர்.
இன்னொரு பெர்சே பேரணி நடத்தப்பட்டால் அதிலும் பங்குபெறத் தயாராக இருக்கிறார்.
“இளைஞர்களாகிய நமக்கு, நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் பொறுப்பு உண்டு”, என்றாரவர்.
தம் நிலைக்காக போலீசுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பார் அஸ்ருல். பினாங்கில் இயந்திர பொறியியலாளராக பணி புரிந்த அவருக்கு இப்போது வேலையும் போய்விட்டது.
“அந்த வேலைக்கு நல்ல கண்பார்வை உள்ளவர் தேவை என்று சொல்லி விட்டார்கள்”, என்றவர் சொன்னார்.
பெர்சே பேரணியில் போலீசார் கண்ணீர்-புகைக் குண்டு பாய்ச்சியதன் விளைவாக பலர் காயமடைந்தனர். அங்கு செய்தி சேகரித்துக்கொண்டிருந்த செய்தியாளர்கள் பலரும்கூட பாதிக்கப்பட்டனர்.அவர்களில் சிலர் போலீசாரிடம் அடியும் பட்டனர்.
இதனிடையே, சுவாராம் செயலக உறுப்பினர் ஒங் ஜிங் செங், வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட போலீசாரையும் பெர்சே ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது வழக்கு தொடுத்துள்ள சட்டத்துறைத் தலைவரையும் கண்டித்தார்.
போலீசும் சட்டத்துறை அலுவலகமும் அரசாங்கத்தின் “கருவிகளாக மாறி” மக்களை மிரட்டி வருவதாகக் கூறினார்.
பெர்சே பேரணியின்போது போலீசின் முரட்டுத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் அதைப் பற்றி போலீசில் புகார் செய்ய வில்லை என்றால் உடனே செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
“அப்படி அவர்கள் புகார் செய்யச் செல்லும்போது சுவாராமில் உள்ள நாங்களும் உடன்வருவது நல்லது. ஏனென்றால் புகார் செய்யச் செல்வோரிடம் போலீஸ் சரியாக நடந்துகொள்வதில்லை என்று கேள்விப்படுகிறோம்”, என்று ஒங் கூறினார்,