அனைத்து தேர்தல் சீர்திருத்தங்களும் உடனடியாக அமலாக்கப்படவேண்டும், அம்பிகா

எல்லாத் தரப்புக்களும் ஒப்புக்கொண்ட அனைத்து தேர்தல் சீர்திருத்தங்களும் உடனடியாக அதுவும் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அமலாக்கப்பட வேண்டும் என பெர்சே 2.0 அமைப்பின் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கூறுகிறார்.

விரைவில் அமைக்கப்படவிருக்கும் நாடாளுமன்றத் தேர்வுக் குழு விவாதித்து முடிவு செய்த பின்னரே பரிந்துரைக்கப்படும் அனைத்து சீர்திருத்தங்களும் அமலாக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது குறித்த பெர்சே 2.0 அமைப்பின் நிலை அது என அவர் சொன்னார்.

“சம்பந்தப்பட்ட தரப்புக்கள் ஒப்புக்கொண்டதும் அவை அமலாக்கப்பட வேண்டிய விஷயங்களாகும்”, என அம்பிகா இன்று தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.

அவர் குறிப்பாக மூன்று தேர்தல் சீர்திருத்தங்களைக் குறிப்பிட்டார். அழிக்க முடியாத மையைப் பயன்படுத்துவது, வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களுக்கு வாக்குரிமை அளிப்பது, வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவது ஆகியவையே அவை.

அந்த முதல் இரண்டு சீர்திருத்தங்களுக்கும் தேர்தல் ஆணையமும் அம்னோ உச்ச மன்ற உறுப்பினரும் சட்டத்துறைக்கு பொறுப்பான அமைச்சருமான முகமட் நஸ்ரி அப்துல் அஜீஸும் ஆதரவு அளித்துள்ளனர்.

என்றாலும் இரு தரப்பையும் சார்ந்த உறுப்பினர்கள் அங்கம் பெற்றுள்ள நாடாளுமன்றத் தேர்வுக் குழு முதலில் எல்லா தேர்தல் சீர்திருத்த யோசனைகளையும் விவாதித்து முடிவு செய்ய வேண்டும் என நஸ்ரி விரும்புகிறார்.

அதன் விளைவாக ஜுலை 9ம் தேதி பேரணி மூலம் தேர்தல் சீர்திருத்த இயக்கத்தின் வேகம் தொய்வடைந்துள்ளது.

அமைச்சர் ஒருவர் தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்ற சிற்ப்புக் குழுவை அமைப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது, ஆளும் கூட்டணி காலத்தைக் கடத்துவதற்கு தயாரித்துள்ள தந்திரம் என எதிர்ப்பாளர்கள் கருதுகின்றனர்.

அத்தகையக் குழுவை அமைப்பதற்கு யோசனை தெரிவித்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தேர்தல் சீர்திருத்தத்தில் முழு ஈடுபாடு காட்டவில்லை எனக் கூறிக் கொண்டு அந்தக் குழுவில் இணைவதா இல்லையா என்பதை இன்னும் பக்காத்தான் ராக்யாட் முடிவு செய்யவில்லை.

சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு இடையில் இணக்கம் ஏற்பட நாடாளுமன்றத் தேர்வுக் குழு உதவும் என்றாலும் அந்தக் குழுவுக்காக காத்திருக்காமல் ஒப்புக் கொள்ளப்பட்ட பல யோசனைகளை அமல் செய்யலாம் என அம்பிகா சொன்னார்.

“நமக்கு இங்கு காலம் ஒரு பிரச்னையாகும். வரும் நவம்பரிலிருந்து 2013ம் ஆண்டுக்குள் எந்த நேரத்திலும் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம். நாடாளுமன்றத் தேர்வுக் குழு முடிவு செய்யவில்லை என்பதால் சீர்திருத்தங்களை அமலாக்க முடியாது என அரசாங்கம் காரணம் கூறுவதைக் காண நாங்கள் விரும்பவில்லை.”

அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக எல்லா சீர்திருத்தங்களும் அமலாக்கப்படா விட்டால் நாடாளுமன்றத் தேர்வுக் குழு அமைக்கப்படுவதால் எந்தப் பயனும் இல்லை. ஏனெனில் பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றத்துடன் அந்தக் குழுவும் கலைக்கப்பட்டு விடும் என்பதை அம்பிகா சுட்டிக் காட்டினார்.

“நமக்கு நேரம் இருந்தால் காத்திருப்பதில் தவறு இல்லை. ஆனால் நமக்கு இப்போது நேரம் இல்லை.”

TAGS: