நஜிப்பின் 1,000 மெட்ரிகுலேஷன் எங்கே?

மலேசிய இந்தியர்களின் உயர்க்கல்வி வாய்ப்புக்களை பிரகாசமாக்க மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் உறுதியளித்த அதிகப்படியான 1,000 மெட்ரிகுலேஷன் இடங்கள் இன்னமும் இந்தியர்களுக்கு வழங்கப்படவில்லை என்று செம்பருத்தி.கொம் (www.semparuthi.com) மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி மலேசிய இந்திய மக்கள் தன்மீது நம்பிக்கை கொள்ளவேண்டும் என்ற வகையில் காப்பார் டிஎன்பி கிலாட் கிளப் மைதானத்தில் பொங்கல் முன்னிட்டு 20,000 இந்தியர்கள் (என்று கூறப்பட்டது) முன்னிலையில் உரையாற்றிய நஜிப் அந்த உறுதி மொழியை அளித்தார்.

அதன்படி நடப்பில் மெட்ரிகுலேஷனில் இந்தியர்களுக்கு கிடைத்து வரும் 559 இடங்கள் 1,500-க்கும் அதிகமாக 2012 / 2013-க்கான நுழைவில் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இது எஸ்.பி.எம் தேர்வு முடிவு வெளியானவுடன் மேற்கொள்ளப்படும் என்றிருந்தது. கடந்த மார்ச் 21-ஆம் எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதோடு இரண்டு மாதங்கள் முடிந்தும்விட்டன ஆனால் இந்த 1,000 அதிகமான இடங்கள் இன்னமும் இந்தியர்களுக்கு அளிக்கப்படவில்லை என்கிறார் செம்பருத்திக்கு பேட்டியளித்த சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம்.

இதுசார்பாக வெளியான தகவல்களின்படி இந்த அதிகப்படியான 1,000 இடங்களை ஒரு தனியார் நிறுவனத்துடன் நிரப்புவதற்கு ம.இ.கா-வும் பைனரி பல்கலைக்கழக கல்லூரியும் (Binary University College) ஓர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். இது சார்பாக ம.இ.கா-வின் இணையத்தளத்தில் வெளியான காணொளி ஒன்று திடீரென நீக்கப்பட்டுள்ளது. வாசகர்கள் அதன் மறுபதிவை இங்கே காணலாம்.

அக்காணொளி தகவலின்படி அந்த அதிகப்படியான 1,000 இடங்கள் அமைச்சரவையில் பிரதமரால் உறுதிப்படுத்தப்பட்டது என்றும் அது ஒரு விசேச நிதியின் வழி செயலாக்கம் காணும் என்றும் மாஇகா தலைவரும் பிரதமத்துறை அமைச்சருமான செனட்டர் ஜி. பழனிவேலு மற்றும் பிரதமத்துறை துணை அமைச்சர் எஸ். கே. தேவமணி ஆகியோர் அறிவித்தனர்.

தனியார் கல்லூரியான பைனரியால் எப்படி இந்த அரசாங்க வழிவகையில் உள்ள மெட்ரிகுலேஷன் நடத்த இயலும் என்ற வினாக்கள் தோன்றின. இது சார்பாக மேல் விளக்கத்தை பெற இயலாத நிலையில். பைனரி கல்லூரியின் மெட்ரிகுலேஷன் சான்றிதலை உயர் நிலை கல்விக் கூடங்களால் அங்கீகாரம் செய்ய இயலாத நிலை உருவாகியுள்ளதாக தெரிகிறது.

எஸ்பிஎம் (SPM) தேர்வுகளில் சிறப்பு தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்கள் இந்த பைனரி கல்லூரியின் வழி மெட்ரிகுலேஷன் செய்தால் அவர்களால் அரசாங்க உயர்கல்விக் கூடங்களுக்கு மனு செய்ய இயலாது. அவர்கள் தனியார் கல்வியில்தான் தொடர இயலும்.

“அரசியல் நாடங்களில் இந்திய மாணவர்களை பணையம் வைக்க வேண்டாம்” என்று கேட்டுக்கொள்ளும் வழக்கறிஞர் கா. ஆறுமுகம், “பிரதமர் உறுதியை கூட நடைமுறையாக்க தேசிய முன்னணி அரசாங்கத்தின் அமுலாக்க பிரிவால் இயலாததை, ம.இ.கா எப்படி மாற்றப்போகிறது?” என வினவுகிறார்.

வாய் கிழிய கத்தும் ம.இ.கா வினர் சமுதாய நலன் கருதி தங்களின் அரசியல் நோக்கை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்கிறார் ஆறுமுகம். இந்தியர்களுக்குத் தேவை நிலையான கொள்கைகள், அதைச் செய்ய இயலாத தேசிய முன்னணி அரசை எதற்காக ஆதரிக்க வேண்டும்?