FGVH பொது இடங்களை கையகப்படுத்த முடியும்

பெல்டா குடியேற்றக்காரர்கள் இப்போது அனுபவித்து வருகின்ற பொது இடங்கள் FGVH என்ற Felda Global Venture Holdings பங்குப் பட்டியலில் சேர்க்கப்பட்டதும் பாதுகாப்பாக இருக்காது. இவ்வாறு பிகேஆர் எச்சரிக்கிறது.

காரணம் FGVH மீதான கட்டுப்பாட்டை குடியேற்றக்காரகள் இழந்ததும் பெல்டா பகுதிகளில் உள்ள திறந்த நிலப் பகுதிகளையும் கடை மனைகளையும் அந்த நிறுவனம் கையகப்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது என அந்தக் கட்சியின் வியூக ஆலோசகர் ராபிஸி இஸ்மாயில் கூறுகிறார்.

“அது ஒவ்வொரு குடியேற்றக்காரருக்கும் சொந்தமான வீட்டையும் 10 ஏக்கர் நிலத்தையும் தொட முடியாது என்பது உண்மைதான். ஆனால் நிலப் பட்டா இல்லாத எந்த நிலத்தையும் அது எடுத்துக் கொள்ள முடியும்.”

பெல்டா சமூகம், ஒராங் அஸ்லி உரிமைகள் மீதான பிகேஆர் மாநாட்டில் அவர் பேசினார். அவ்வாறு கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்குமானால் பெல்டா குடியேற்றக்காரர்களுடைய சமூக வாழ்க்கை முறையிலும் சுற்றுச்சூழலிலும் பெருத்த மாற்றங்கள் ஏற்படும் என்றார் அவர்.

1970ம் ஆண்டுகள் தொடக்கம் இன்னும் மேம்படுத்தப்படாத 843,000 ஹெக்டர் நிலம் பெல்டாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நிலம் 99 ஆண்டு குத்தகையில் FGVH-டம் விழுந்து விடும்.

அந்த நில ஆர்ஜிதம் 1960ம் ஆண்டுக்கான குழும குடியேற்றச் சட்டத்தை மீறுவதாகவும் ராபிஸி சொன்னார்.

பெல்டா என்பது நிர்வாக அமைப்பே தவிர எந்த நேரத்திலும் அது நிலத்தை சொந்தமாக வைத்திருக்கக் கூடாது என்பதே அந்த சட்டமாகும்.

குடியேற்றக்காரர்கள் வைத்திருக்கும் பங்குகளின் அளவுடன் நிலச் சொத்துக்களைப் பிணைப்பதால் நாடு முழுவதும் குடியேற்றக்காரர்களுக்கு 20,000 ஏக்கர் நிலம் மட்டுமே சொந்தமாக இருக்கும்.

“இரண்டவாது மூன்றாவது தலைமுறை குடியேற்றக்காரர்களுக்கு மேம்படுத்தப்படாத  நிலம் விநியோகிக்கப்பட்டால் அவர்கள் அந்த நிலத்தில் வேலை செய்து, அதிக ஆதாயத்தைப் பெற முடியும். அந்த ஆதாயம் இப்போது அவர்களுக்கு ஆயுட்காலத்துக்கு ஒரு முறை மட்டுமே கொடுக்கப்படவிருக்கும் 15,000 ரிங்கிட்டைக் காட்டிலும் மிக அதிகமாக  இருக்கும்.

பெல்டா பங்குகள் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுவதின் மூலம் 5.6 பில்லியன் ரிங்கிட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் குடியேற்றக்காரர்களுக்கு வழங்கப்படும் தொகையின் மொத்த அளவே 1.6 பில்லியன் ரிங்கிட் தான் என அவர் சொன்னார்.

“எஞ்சியுள்ள பணம் எங்கே போகப் போகிறது ? ரோஸ்மாவுக்கு இன்னொரு மோதிரம் வாங்குவதற்கா ?” என அவர் கிண்டலாக வினவினார்.

 

TAGS: