மகாதீர்: பெர்சே ‘வன்முறை’ பொதுத் தேர்தலில் தோல்வி கண்டால் பக்காத்தான் வன்முறையில் ஈடுபடுவதற்கான ஆயத்தம்

அடுத்த பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவைக் கைப்பற்றத் தவறினால் “வன்முறை ஆர்ப்பாட்டங்களில்” பக்காத்தான் இறங்குவதற்கான ஆயத்தமே பெர்சே 3.0 பேரணி என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருக்கிறார்.

“பெர்சே ஆர்ப்பாட்டங்கள்… 13வது பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெறத் தவறினால் அந்தத் தேர்தல் முடிவுகளை நிராகரிப்பதற்கான ஆயத்தம்.”

“அவற்றின் தோல்வியைத் தொடர்ந்து வன்முறை ஆர்ப்பாட்டங்கள் தொடரும். தேர்தல் முடிவுகள் நிராகரிக்கப்படும். அடுத்து புதிய அரசாங்கம் எதிர்க்கட்சிகளுடைய ஒப்ப்தலுடன் அமையும்,” என மகாதீர் தமது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“அதற்கு பின்னர் அவை மீண்டும் தேர்தலை நடத்த முயலும். அப்போது அவை தில்லுமுல்லு செய்ய முடியும்.”

22 ஆண்டுகளுக்கு மேல் நாட்டின் பிரதமராக பணியாற்றியுள்ள அந்த முன்னாள் பிரதமர் சேடெட் என்ற புனை பெயரில் வலைப்பதிவில் எழுதியுள்ளார்.

அவர் தூய்மையான நியாயமான தேர்தல்களுக்கு போராடிய அந்தப் பேரணியை “வன்முறையானது” என்றும் எதிர்க்கட்சிகளின் “உருவாக்கம்” என்றும் கண்டனம் செய்து வருகிறார்,.

தேர்தல்களில் பிஎன் படைத்துள்ள சாதனைகளை வெகுவாகப் பாராட்டிய மகாதீர் 2008 தேர்தலில் பிஎன் எதிர்பாராத தோல்விகளைத் தழுவியதற்கு தமக்கு அடுத்து பொறுப்பேற்ற அப்துல்லா படாவி நிர்வாகம் மீது ‘மக்கள் கொண்டிருந்த வெறுப்பே காரணம்” என்றார்.

 

TAGS: