இந்தியர்களின் அடையாளப்பத்திர பிரச்னைகளுக்குத் தீர்வுக்கான முன்வாருங்கள்

இந்தியர்களின்  அடையாள பத்திர பிரச்னைகளுக்கு முடிவான தீர்வைக் காண சக இந்தியர்கள் உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

“ஒவ்வொரு இந்தியரும் தனது அண்டை வீட்டார், உறவினர்கள், தங்களுக்கு தெரிந்தவர்கள்  மற்றும் குடும்ப நண்பர்கள் என்று எவரெல்லாம் அடையாளப் பத்திரங்கள் இன்றி அல்லல் படுகின்றனரோ அவர்களை எதிர் வரும் மே 27ந்தேதி ஞாயிற்றுக்கிழமை  கிள்ளான் டேவான்  ஹம்சாவில் காலை மணி 9.30 லிருந்து பிற்பகல் மணி 2.00 வரையில்  நடைபெறும் அடையாள பத்திர பதிவுக்கு அழைத்து வர வேண்டுகிறோம்”, என்று அவர் கேட்டுக்கொள்கிறார்.

நாடு சுதந்திரமடைந்து 54 ஆண்டுகளைக் கடந்து விட்ட போதிலும் இந்திய சமூகம் அதன் அடிப்படை பிரச்னையிலிருந்து இன்னும் விடுபடவில்லை என்பது வெட்கப்பட வேண்டிய உண்மை வலியுறுத்திய அவர்,  இந்தியர்கள் எதிர்நோக்கும் அடையாளப் பத்திர மற்றும் குடியுரிமை பிரச்சனைகள் மிகக் கடுமையானவை. இப்பத்திரங்கள் மறுக்கப்படும் ஒவ்வொரு இந்தியரும் அவர் தம் குடும்பத்தினரும், இந்நாட்டில் கடுமையான கல்வி, பொருளாதார, சமூகப் பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றனர் என்பதனை நாம் மறுக்க முடியாது என்பதைச் சுட்டிக் காட்டினார்.

“அனைத்து  தகுதிகள் இருந்தும் பலரின் விண்ணப்பங்கள் ஆண்டு கணக்கில் இழுத்தடிக்கப்படுவதால் அல்லது நிராகரிக்கப் பட்டதால் பலர் விரக்தி அடைந்த நிலையில் மேற்கொண்டு விண்ணப்பிப்பதை நிறுத்திக்கொண்டனர். மேலும், சிலர் சரியான வழிக்காட்டல்  இல்லாததால் தவித்துக்கொண்டு இருக்கின்றனர்.  இவர்களுக்கு உதவும் பொருட்டு சிலாங்கூர் மாநில அரசு கிள்ளானில் மைசெல் என்னும் ஓர் அடையாள பத்திர பதிவு ஆலோசனை அலுவலகத்தை  அமைத்து உதவி வருகிறது”, என்றாரவர்.

“மைடப்தார் என்று  பெரிய  விளம்பரத்துடன்  ஆரம்பித்து நடத்தியவர்களும், அது இல்லை, இது இல்லை, எங்கள் வேலை இல்லை,  எங்கள் பொறுப்பில்லை என்று தட்டிக்கழித்து வருகின்றனர். சமூகத்தின்  உண்மையான  பிரச்னைகளுக்கு விரைவில்  தீர்வைக்கான வேண்டும் என்ற வேட்கை ஒவ்வொரு மனிதரின் உதிரத்திலும் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் இந்த பிரச்னைகளுக்கு  விரைவில்  தீர்வு காண முடியாது.

“இப்போது ஒவ்வொரு நாளும் பத்திரிக்கைகளில்  அடையாள பத்திரங்கள் அல்லாதார் பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணம் இருப்பது இன்னும் பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இந்த பத்திர விவகாரங்களில் சிக்கி தவிக்கிறார்கள் என்ற உண்மையை நன்கு உணர்த்துகின்றது”, என்பதை அவர் வலியுறுத்தினார்.

உள்துறை அமைச்சர்  ஹிஷாமுடின் இவ்வாண்டு ஆரம்பத்தில் கொடுத்த புள்ளிவிவரங்கள் படி,

குடியுரிமை …………………………………….. 62,604
தாமதமான பிறப்பு பத்திரப் பதிவு…….. 138719
குடிநுழைவு விண்ணப்பங்கள்………………. 18162
மொத்தம்………………………………………….219,485

இதில் மேற்கண்ட விண்ணப்பங்கள்  அனைத்தும் அங்கீகரிக்கப்பட்டதாக பொருள்படாது’’ என்று அவர் கூறியுள்ளார்.

ஆக 219,485 விண்ணப்பங்கள்  எந்த இனத்தினுடையது, அதில் எத்தனை பேரின் விண்ணப்பங்கள்  அங்கீகாரத்தை பெற்றுள்ளது என்பதனை  எவரும் விளக்க முன் வரவில்லை என்பதை சேவியர் சுட்டிக் காட்டினார்.

 “ஆகவே, இந்த விவகாரத்திற்கான  தீர்வை தேட ஆளும் கட்சி, எதிர்கட்சி என்ற பேதங்களை விட அடையாளப்பத்திரங்கள் பிரச்சனையை தீர்க்க அனைவரின் அற்பணிப்பும் அவசியம்.

“அதில் பக்காத்தான்  அரசுகளின் கடப்பாட்டை உணர்த்த  சிலாங்கூர் மாநில பொருளாதார ஆலோசகரும் நாடாளுமன்ற எதிரணித் தலைவருமான அன்வார் இப்ராகிம்  வரவுள்ளார்  என்பதால் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும். 

“இந்த மண்ணில் பிறந்திருந்தும் அற்ப காரணங்களுக்காக இழுத்தடிக்கப்படும் நம்மவர்களின்  பிரச்சனைகளைத் தீர்க அனைவரும் கிடைக்கும் வாய்ப்புகளை  நன்கு பயன்படுத்திக்கொள்ள தவறக்கூடாது, தவறாமல் வாருங்கள்”, என்று கேட்டுக்கொண்டார்  சேவியர் ஜெயக்குமார்.

TAGS: