“இசி என்ற தேர்தல் ஆணையம் விழித்துக் கொண்டு உண்மை நிலையை உணர வேண்டும். வாக்காளர் பட்டியல் கறை படிந்தது. தேர்தல் நடைமுறையை நம்ப முடியாது என பெரும்பான்மையான மலேசியர்கள் சொல்லி விட்டார்கள்”
பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என 92 விழுக்காடு மலேசியர்கள் விரும்புகின்றனர்
பெர்ட் தான்: பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என 92 விழுக்காடு மலேசியர்கள் விரும்புகின்றனர் என்ற முடிவு, ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தியுள்ளது.
மலேசியர்கள் தேர்தல் நடைமுறைகளில் காணப்படும் பிரச்னைகளை நன்கு அறிந்துள்ளனர் என்பதே அதுவாகும்.
கடந்த காலத்தைப் போல் அல்லாமல் மலேசியர்கள் இப்போது எதிலும் கவனம் செலுத்துகின்றனர். அரசியல் அரங்கில் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குத் தெரிகிறது.
பக்காத்தான் ராக்யாட், வாக்காளர் பட்டியல் மோசடிகள் எனக் கூறப்படுவது பற்றியும் ‘தவறுகள்’ பற்றியும் அன்றாடம் அம்பலப்படுத்தியதே அதற்குக் காரணம் ஆகும்.
பல்வேறு பெர்சே குழுக்கள் தேர்தல் நடமுறைகள் குறித்து பொது மக்களுக்குத் தொடர்ந்து விளக்கமளித்து வருவதும் இன்னொரு காரணமாகும்.
அந்தத் தகவல் வெற்றிகரமாக மக்களைச் சென்றடைந்ததால் மலேசியாவிலும் உலகம் முழுவதும் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பெர்சே 3.0 பேரணியில் 300,000 மக்கள் கலந்து கொண்டனர்.
கேகன்: இசி என்ற தேர்தல் ஆணையம் விழித்துக் கொண்டு உண்மை நிலையை உணர வேண்டும். வாக்காளர் பட்டியல் கறை படிந்தது. தேர்தல் நடைமுறையை நம்ப முடியாது என பெரும்பான்மையான மலேசியர்கள் சொல்லி விட்டார்கள்.
அந்த எண்ணத்தைப் போக்குவதற்கு இசி எதுவும் செய்யவில்லை. மாறாக முறைகேடுகளுக்கு அபத்தமான காரணங்களைச் சொல்லி நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
உண்மையில் வெளிப்படையான போக்கை குறைக்கும் பொருட்டு வாக்குச் சாவடிகளிலிருந்து தேர்தல் முகவர்களை தடை செய்வது, அச்சிடப்பட்ட பிரச்சார கையேடுகளில் வெளியீட்டாளர் பெயர்களை அகற்றுவது போன்ற நடவடிக்கைகளையும் அறிமுகம் செய்ய முயற்சி செய்தது.
பிஎன் கறை படிந்த வெற்றியை அடைந்துள்ளது என மக்கள் கருதினால் அது பிஎன் -னுக்கு எந்த வகையிலும் உதவப் போவதில்லை. மாறாக அதன் அழிவுக்கே வழி கோலும் என்பதை இசி உணர வேண்டும்.
மோசடிகள் மூலம் ஆட்சியைப் பிடித்ததாக கருதப்படும் எந்த அரசாங்கமும் சட்டப்பூர்வமானது அல்ல என்றே கருதப்படும். ஆட்சி புரிவதற்கு அதற்கு தார்மீகத் தகுதி கிடையாது.
அடையாளம் இல்லாதவன்_3f4a: அம்னோ/பிஎன் அரசாங்கத்துக்கு சாதகமான முடிவுகளைப் பெறும் பொருட்டு சட்ட விரோதமான நடவடிக்கைகள் வழி வாக்காளர் பட்டியலில் மோசடி செய்யப்படுகிறது என மக்கள் நீண்ட காலமாகவே எண்ணுவதால் மெர்தேக்கா மய்ய கருத்துக் கணிப்பு முடிவுகள் வியப்பைத் தரவில்லை.
வாக்காளர் பட்டியல் மீது மக்களுக்கு நம்பிக்கையே இல்லை என்பதை அந்த முடிவுகள் உணர்த்துகின்றன. தூய்மையான வாக்காளர் பட்டியல் இல்லாமல் நடத்தப்படும் எந்தத் தேர்தலும் பயனற்ற நடவடிக்கையாகும். காரணம் அதன் முடிவுகளை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமும் மக்களுடைய நம்பிக்கையையும் பெற முடியாது.
கைரோஸ்: வாக்காளர் பட்டியலை நீங்கள் எப்படிப் பார்த்தாலும் பெரும்பாலான மலேசியர்கள் அதனை மாற்ற வேண்டும் என விரும்புகின்றனர் என்பது தான் உண்மை. நடப்பு வாக்காளர் பட்டியல் முழுக்க முழுக்க நியாயமற்றது. பிஎன் -னுக்குச் சாதகமாக உள்ளது என இப்போது மக்கள் எண்ணுகின்றனர்.
ஆவி வாக்காளர்களும் தில்லுமுல்லு நடவடிக்கைகளும் உட்பட பல முறைகேடுகள் வாக்காளர் பட்டியலில் காணப்படுகின்றன. தேர்தல் நியாயமானதாகவும் தூய்மையானதாகவும் வெளிப்படையாகவும் இருக்கும் வரையில் தேர்தல் யார் வெற்றி பெறுகிறார்கள் யார் தோல்வி காண்கிறார்கள் என்பது பற்றி மக்களுக்குக் கவலையே இல்லை.
நடப்பு சூழ்நிலையில் தேர்தல் நடைமுறைகள் பிஎன் -னுக்குச் சாதகமாக உருவாக்கப்பட்டு தில்லுமுல்லு செய்யப்பட்டுள்ளது எனப் பரவலாகக் கருதப்படுகின்றது.
அந்தக் குறைபாடுகள் போக்கப்படாமல் தேர்தல் நடத்தப்பட்டால் பிஎன் வெற்றி பெற முடியும். ஆனால் அது மோசடி வழி பெற்றதாக இருக்கும். சட்டப்பூர்வமற்ற மோசடி அரசாங்கமாகவே அது கருதப்படும்.
அரசாங்கம் இப்போது பெரிய முரடனைப் போல் நடந்து கொண்டு மக்களை அடி பணிய வைக்க முயற்சி செய்வது தான் அதிர்ச்சி அளிக்கிறது. அது மக்களை அடிக்கலாம். சிறையில் அடைக்கலாம். ஆனால் மனித உணர்வுகளை அது அடக்கி வைக்க முடியாது.
நியாயமானவன்: மௌனமாக இருக்கும் பெரும்பான்மை மக்கள் கொடுத்துள்ள வலுவான செய்தி அதுவாகும். தேர்தல் நடைமுறைகள் மீதும் தேர்தல் ஆணைய நிர்வாகம் மீதும் 90 விழுக்காடு மலேசியர்கள் மகிழ்ச்சி அடையவில்லை.
தேர்தல் நடைமுறைகள் தூய்மை செய்யப்படாமல் தேர்தல் நடந்தால்ல் மக்கள் பிஎன் -னைத் தண்டிக்கப் போவது திண்ணம்.
மௌனமாக இருக்கும் பெரும்பான்மை மக்களுடைய விருப்பங்களுக்கு நடப்பு அரசாங்கம் செவி சாய்ப்பது நல்லது இல்லை என்றால் அது விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
——————————————————————————–