‘அதிர்ச்சியூட்டும்’ ஸ்கார்ப்பியோன் தகவல்கள் பாங்காக்கில் அம்பலப்படுத்தப்படும்

மனித உரிமைகளுக்குப் போராடும் அரசு சாரா அமைப்பான சுவாராம், தான் தொடுத்துள்ள ஸ்கார்ப்பியோன் வழக்கு தொடர்பில் நாளை பாங்காக்கில் கூடுதலான விவரங்களை அம்பலப்பத்துகிறது.

பிரான்ஸைச் சேர்ந்த அதன் வழக்குரைஞர் மலேசியாவுக்குள் நுழைவதற்கு அனுமதி கிடைக்காததால் அந்த விவரங்கள் பாங்காக்கில் வெளியிடப்படுகின்றன.

மலேசியாவுக்குள் நுழைவதற்கு சுவாராம் வழக்குரைஞர் ஜோசப் பிரெஹாமுக்கு வேலை அனுமதி விசா வழங்கப்படும் என்பது உறுதியாகத் தெரியாமல் இருப்பதால் அவரைச் சந்திக்க தாய்லாந்துக்குச் செல்வது என அந்த அமைப்பின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

பாரிஸில் சுவாராம் சமர்பித்துள்ள ஸ்கார்ப்பியோன் நீர்மூழ்கி தொடர்பான வழக்கில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் குறித்து பின்னர் பிரெஹாம், சுவாராம் இயக்குநர் சிந்தியா கேப்ரியல், சட்டப் பேராளர் பாடியா நாட்வா பிக்ரி ஆகியோர் நிருபர்களைச் சந்தித்து விளக்கம் அளிப்பார்கள்.

நாளை தாய்லாந்து அந்நிய பத்திரிக்கையாளர் மன்றத்தில் நிருபர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிந்தியா தெரிவித்தார்.

“அரசு தரப்பு வழக்குரைஞர்களின் தொடக்கக் கண்டு பிடிப்புக்கள் பற்றிய ‘அதிர்ச்சியூட்டும்’ விவரங்களை அறிவிக்கவும் அந்த வழக்கு  தொடர்பில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களை வெளியிடவும் நிருபர்கள் சந்திப்புக்கு திட்டமிடப்பட்டுள்ளது,” என அவர் சொன்னார்.

பிரெஹாம் இந்த வாரம் மலேசியாவுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் இந்த நாட்டுக்குள் நுழைவதற்காக வேலை அனுமதி விசா கோரி அவர் சமர்பித்த விண்ணப்பத்தை மலேசிய அதிகாரிகள் இன்னும் அங்கீகரிக்கவில்லை.

அதனால் அவரும் சுவாராம் அதிகாரிகளும் பாங்காக்கில் சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது.

பிரெஹாமின் சகாவான வில்லியம் போர்டன் கடந்த ஆண்டு பினாங்கில் நிதி திரட்டும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

 

TAGS: