பொதுத் தேர்தல் எந்த நேரத்திலும் நடக்கலாம் என்ற நிலையில், அம்னோவுடன் கூட்டுவைத்திருக்கும் கட்சிகள், எந்தெந்த இடங்களில் போட்டியிடுவது என்பதை முடிவுசெய்ய இயலாமல் மிகுந்த அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. விரும்பும் இடங்களைப் பேரம் பேசிப் பெறும் நிலையில் அவை இல்லை என்றுதான் தோன்றுகிறது.
அம்னோ தலைவரும் பாரிசான் நேசனல் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக், எதிர்பார்க்கப்படுவதுபோல் இவ்வாண்டுக்குள்ளேயே பொதுத் தேர்தலை நடத்த முற்படுவாரானால் அம்னோவின் நான்கு பங்காளிகட்சிகளின்-மசீச, மஇகா, கெராக்கான், பிபிபி- தலைவர்களுக்கும் அது ஒரு சிக்கலாக அமையலாம்.
அந்நான்கும் கடந்த 2008 தேர்தலில் பக்காத்தான் ரக்யாட்டால் கிட்டதட்ட ஒழித்துக்கட்டப்படும் நிலையை எதிர்நோக்கின என்பதுடன் கட்சித் தலைவர்கள் நால்வரும் கடந்த பொதுத்தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்லர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை. மற்ற மூவரும்-மஇகா தலைவர் ஜி.பழனிவேல், கெராக்கான் தலைவர் கோ சூ கூன், பிபிபி தலைவர் எம். கேவியஸ்-போட்டியிட்டுத் தோற்றவர்கள்.
கடந்த பொதுத் தேர்தலில் வாக்காளரின் ஆதரவு என்ற விசயத்தில் அதலபாதாளத்தைத் தொட்டிருந்த இந்நான்கும் இழந்த ஆதரவை மீண்டும் பெறுவதில் எந்த அளவுக்கு வெற்றிபெற்றுள்ளன என்பது ஒரு கேள்வி. எந்த அளவுக்குக் கட்சியைக் கட்டுப்பாட்டில், ஒழுங்கில் வைத்துள்ளன என்பது இன்னொரு கேள்வி.
இவற்றைவிடவும் முக்கியமான ஒன்று- நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதில்தான் இவர்களின் எதிர்காலமே அடங்கியிருக்கிறது என்பதால் வெற்றிபெறுவதற்குப் பொருத்தமான இடங்களை அம்னோவுடன் பேச்சு நடத்தி இவர்களால் பெற முடியுமா?
அதில் தோல்வி கண்டால் இவர்கள் கட்சித் தலைவர்களாக இருப்பது என்ன நியாயம் என்ற கேள்வி எழும். இவர்களுக்குப் பதில் மற்றவர்களைத் தலைவர்களாக்கும் உள்ளடி வேலைகளும் நடக்கும்.
மலேசியாகினி மூன்று அரசியல் ஆய்வாளர்களிடம் பேசியது. அம்மூவரும்-ஒங் கியான் மிங், ஜேம்ஸ் சின், கூ கேய் பெங்- நான்கு கட்சித் தலைவர்களும் எங்கெங்கு போட்டிடலாம் என்பது பற்றியும் அவர்களின் வெற்றிவாய்ப்புப் பற்றியும் தங்கள் கருத்துகளைக் கூறினர்.
டாக்டர் சுவா சொய் லெக்
இங் கியான் மிங்: போட்டியிட சாத்தியமான தொகுதிகள்- தஞ்சோங் மாலிம்(பேராக்), தஞ்சோங் பியாய் அல்லது கூலிம் (இரண்டும் ஜோகூரில்).
சுவா, பெரும்பாலும் கூலாய் தொகுதியைத்தான் தேர்ந்தெடுப்பார். அது சுமார் 60 விழுக்காடு சீன வாக்காளர்களைக் கொண்ட தொகுதி. ஜோகூர் மசீச கோட்டை. அத்துடன் சுவாவுக்கு வலுவான ஆதரவுள்ள இடமும்கூட. அங்கு போட்டியிட்டு வெற்றிபெறுவது ஒரு கல்லில் இரு மாங்காயை அடித்துவீழ்த்துவது போலாகும். ஏனென்றால் அவ்வெற்றி, மசீச-வின் முன்னாள் தலைவரும் தம் வைரியுமான ஒங் கா திங்கின் செல்வாக்குக் கட்சிக்குள் வளர விடாமல் தடுக்க ஒரு வாய்ப்பாகவும் அமையும்.
அடுத்து சுவா விரும்பித் தெரிவு செய்யக்கூடிய இடமாக தஞ்சோங் மாலிம் இருக்கும். அது மலாய்க்காரர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பகுதி-நகர்ப்புறத் தொகுதி. அம்னோ ஆதரவு கிடைப்பது உறுதி என்பதால் அதுவும் பாதுகாப்பான ஒரு தொகுதிதான். அதன் நடப்பு எம்பி ஒங் கா சுவான். எனவே, அங்கு சுவா போட்டியிட்டு வெற்றிபெறுவதும் ஒங் சகோதரர்களுக்குக் கட்சியில் உள்ள செல்வாக்கை ஒழிக்க ஒரு வாய்ப்பாகவே அமையும்.
ஜேம்ஸ் சின்: சுவா போட்டியிட சாத்தியமான இடமாக இவர் கருதுவது-லாபிஸ்.
சுவா, லாபிஸுக்குத் திரும்ப விருப்பம் கொண்டிருப்பதை இலேசாகக் கோடிகாட்டியுள்ளார்.ஆனாலும், அதைப் பிரதமரும் பிஎன் தலைவருமான நஜிப்தான் முடிவு செய்ய வேண்டும்.
இப்போது அவரின் மகன் சுவா டீ யோங்தான் அதன் எம்பியாக இருக்கிறார். தந்தைக்குள்ள ஆதரவின் அடிப்படையில் எம்பி-ஆன அவர் தந்தையின் சார்பாக ஒரு பொறுப்பாளராக இருந்து அத்தொகுதியைப் பாதுகாத்து வருகிறார்.ஆக, தந்தை தம் பழைய தொகுதிக்கே திரும்பிச் செல்ல விரும்பலாம்.
கூ கேய் பெங்: லாபிஸ்.
லாபிஸ்தான் சுவா போட்டியிட சிறந்த தொகுதியாகும். அங்கு சுவாவுக்கு ஏற்கனவே ஆதரவு உண்டு. இப்போது அவருக்குப் பதில் அவரின் மகன் அங்கிருப்பதால் அந்த ஆதரவு தொடர்கிறது. மகன் தந்தையிடம் அந்தத் தொகுதியைக் கொடுத்துவிட்டு பக்ரிக்குச் செல்லலாம். ஜோகூர்தான் சுவாவுக்குப் பொருத்தமான இடம். அங்கு அம்னோ ஆதரவும் அவருக்கு நிறைய உண்டு.
ஜோகூரில் இருப்பதைப் போன்ற ஆதரவு அவருக்கு பேராக்கில் இருக்குமா? பிஎன் அடிநிலை உறுப்பினர்களே அவரை ஏற்றுக்கொள்கிறார்களா என்பதை முதலில் ஆராய வேண்டும். சுவா, லாபிஸில் போட்டியிடாது போனாலும் பக்ரியும் போட்டியிட பொருத்தமான இடம்தான். அவர் அந்தத் தொகுதியை டிஏபி-யிடமிருந்து பறிக்க முயலலாம்.
கோ சூ கூன்
ஒங் கியான் மிங்: சாத்தியமான தொகுதிகள்- சிம்பாங் ரெங்காம்(ஜோகூர்), செகாம்புட்(கோலாலம்பூர்)
கோ, சிம்பாங் ரெங்காம் செல்லவே பெரிதும் விரும்பக்கூடும். ஏனென்றால், கெராக்கான் வசம் உள்ள ஒரே தொகுதி அதுதான்.பினாங்குக்கு அவர் திரும்பிச் செல்ல மாட்டார். அங்கு அவரது பாச்சா பலிக்காது. தைப்பிங் செல்ல மாட்டார். ஏனென்றால் டிஏபி-இன் இங்கா கோர் மிங் இவரை விழுங்கி ஏப்பமிட்டு விடுவார்.
பூச்சோங் (சிலாங்கூர்)-வாய்பில்லை. கோலாலம்பூரிலும் அவருக்குப் பொருத்தமான இடங்கள் இல்லை. ஒரே ஒரு தொகுதி உண்டு. கோலாலம்பூர்/சிலாங்கூர் பகுதியில் உள்ள செகாம்புட். ஆனாலும், வெற்றி பெறுவார் என்று உறுதியாக சொல்ல முடியாது.
ஜேம்ஸ் சின்: சாத்தியமான தொகுதி- எதுவுமில்லை.
கோ-வைப் பொருத்தவரை அடுத்த தேர்தலில் அவர் போட்டியிடுவது ஒரு பக்கம் இருக்கட்டும். முதலில் கட்சிக்குள் அவரைக் கவிழ்க்க நடக்கும் உள்ளடி வேலைகளிலிருந்து அவர் மீண்டு வர வேண்டும். மீண்டு வருவாரானால் அவருக்கு ஒரு தொகுதி கிடைப்பது உறுதி.
கூ கேய் பெங்: சாத்தியமான தொகுதி- சிம்பாங் ரெங்காம்
ஆனால் அவர் போட்டியிடுவதும் போட்டியிடாததும் அடுத்த சில மாதங்களில் நடப்பனவற்றைப் பொருத்திருக்கிறது. கோ-வைக் கழற்றிவிட பல முயற்சிகள் கட்சிக்குள் நடக்கின்றன. அவர் கட்சியில் நிலைத்திருப்பதே பெரும்பாடாக இருக்கிறது.
தம் ஆள்களைக் கொண்டு ஆதரவு திரட்டும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளார். ஜோகூர் கெராக்கான் அவரை சிம்பாங் ரெங்காமில் போட்டியிடுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறது. பினாங்கில், அவர் இனி கால் பதிக்க முடியாது.
ஜி.பழனிவேல்
ஒங் கியான் மிங்: சாத்தியமான தொகுதிகள்- காப்பார், கோத்தா ராஜா( எல்லாமே சிலாங்கூரில்)
பழனிவேல் பெரும்பாலும் சிலாங்கூரில்தான் போட்டியிட வேண்டியிருக்கும். ஹுலு சிலாங்கூரில் அவர் நிற்க மாட்டார். அதனால் சுபாங், கோத்தா ராஜா அல்லது காப்பாரில் அவர் போட்டியிடலாம்.
காப்பார் ஒரு பெரிய தொகுதி. நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கும். சிலாங்கூரில் பாஸிடமுள்ள தொகுதிகளில் போட்டியிடுவதைவிட பிகேஆர் வசமுள்ள தொகுதிகளில் போட்டியிடுவது சற்று எளிதாக இருக்கும். அதற்காக சுபாங்கில் போட்டியிட்டு எளிதில் வென்றுவிடலாம் என்பதில்லை. அது, நகர்ப்புறத் தொகுதி. அங்குள்ள வாக்காளர்கள் எதையும் சட்டென்று நம்பிவிட மாட்டார்கள்.
ஜேம்ஸ் சின்: சாத்தியமான தொகுதி -எதுமில்லை
பழனிவேல், மஇகா-வில் பிரபலமானவர். அதற்கு வெளியில் ஒரு செல்வாக்கும் இல்லாதவர். சிலாங்கூரில் சேவை செய்தார் என்ற பெயராவது உண்டா? அதுவும் இல்லை.வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் எப்படி நகர்த்தப்படுகிறார்கள் என்பதைப் பொருத்து அவரது தொகுதி தேர்ந்தெடுக்கப்படலாம்.
கூ கேய் பெங்: சாத்தியமான தொகுதிகள்-ஹூலு சிலாங்கூர் (சிலாங்கூர்), சுங்கை சிப்புட்(பேராக்).
சிலாங்கூரில் நிலவரம் நன்றாக இருக்கிறது.அதனால், அவர் அவரது பழைய தொகுதியான ஹுலு சிலாங்கூருக்கே திரும்பிச் செல்லலாம். ஆனால், அத்தொகுதியின் நடப்பு எம்பி-யைக் கழட்டிக்கொள்ளச் சொல்வது அவ்வளவு நன்றாக இருக்குமா என்று தெரியவில்லை.
அதை விட்டால் அடுத்திருப்பது சுங்கை சிப்புட். நீண்ட காலம் மஇகா கோலோச்சிய ஓர் இடம்.
ஆனால், பழனிவேலுக்குப் பழக்கமான இடம் சிலாங்கூர்தான்.மேலும், தன் தலைவர்கள் பாதுகாப்பான தொகுதிகளைத் தேடிப் பதுங்கிகொள்வதை பிஎன்னும் விரும்பாது. பழனிவேல் தமக்கு நம்பிக்கையும் வழிநடத்தும் ஆற்றலும் இருப்பதை நிரூபிக்க வேண்டும்.
எம்.கேவியஸ்
ஒங் கியான் மிங்: சாத்தியமான தொகுதி- எதுவுமில்லை.
கட்சிக்குள் ஒரே குழப்பம். அதனால் அவருக்கு இடம் கொடுக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை.பேராக்கில், கிரிக்கையை அம்னோ எடுத்துக்கொள்வது நிச்சயம். தைப்பிங், கெராக்கானுக்குக் கொடுக்கப்படலாம். அதை பிபிபி-க்குத்தான் தர வேண்டும் என்றும் எவரும் நஜிப்பை நெருக்குவார்கள் என்றும் தோன்றவில்லை. அதற்காக, அங்கு கெராக்கானுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறவரவில்லை. ஆனால், பிபிபி-க்கு அதைவிட வாய்ப்பு குறைவுதான்.
ஜேம்ஸ் சின்: சாத்தியமான தொகுதி- எதுவுமில்லை
பிபிபி எப்போதும் மற்ற கட்சிகளிடமிருந்து தொகுதிகளை இரவல் பெறுவதே வழக்கமாகி விட்டது. எனவே, இப்போது அதற்கு ஒரு தொகுதியை “இரவல்” கொடுக்கும் கட்சியை முதலில் தேடிப் பிடிக்க வேண்டும்.
கூ கேய் பெங்: சாத்தியமான தொகுதி-எதுவும் இல்லை
பிபிபி-க்கு ஒரு தொகுதியை வழங்குவது நன்மையாக இருக்கும் என்று நிர்வாகம் நிச்சயமாக நினைக்காது. அப்படியே கொடுக்கப்பட்டாலும் கேவியசுக்கு அது கிடைக்காது, ஓர் இளம் வேட்பாளருக்கே அது வழங்கப்படும். எனவே, கேவியசுக்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கவில்லை.