மாற்றரசுக்கட்சி கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றாது

மாற்றரசுக்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் “மிகுந்த சந்தேகம்” கொள்ளவைப்பதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார்.

இன்வெஸ்ட் மலேசியா 2013 நிகழ்வில் தொழில் அதிபர்களிடம் பேசிய நஜிப், பக்காத்தான் ரக்யாட்டின் “மக்களைக் கவரும்” அணுகுமுறைகள் அது ஆட்சியைப் பிடிப்பதில் மட்டுமே அக்கறை கொண்டிருப்பதைக் காண்பிப்பதாகக் கூறினார்.

“எனக்கு நம்பிக்கை இல்லை….பெட்ரோல் விலையை ஒரே நாளில் குறைப்பதெல்லாம் உலகில் எவரும் செய்ய முடியாத காரியம்”, என்றாரவர்.

“இப்போது பெட்ரோல் உதவித்தொகைக்காக மாதந்தோறும் ரிம2பில்லியன் செலவிடுகிறோம்.இதை ரிம3பில்லியன், ரிம4பில்லியன் என்று உயர்த்தினால் நிதிநிலைமை என்னவாகும்?”.

பக்காத்தான் இலவசக் கல்வி வழங்குவதாகவும் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தப்போவதாகவும் கூறுவதெல்லாம் நடக்கக்கூடியவை அல்ல என்றார்.

“நாங்கள் மலேசியாவை உயர் வருமானம் பெறும் நாடாக மாற்றுவதற்கு விரிவான, ஒத்துவரக்கூடிய,நம்பகமான, நடைமுறைக்கு ஏற்ற திட்டங்களை வைத்துள்ளோம்.அவை உருப்பெறுவது மக்கள் அளிக்கும் வலுவான ஆதரவைப் பொறுத்துள்ளது” என்றவர் சொன்னார்.

இன்னொரு கேள்விக்குப் பதிலளிக்கையில், குறைபாடுகள் இருந்தாலும்கூட  வாழ்க்கைமுறைகளாலும் அணுகுமுறைகளாலும் கொள்கைகளாலும் வாழ்வதற்கும் தொழில்செய்வதற்கும் நல்லதொரு நாடாக மலேசியா விளங்குகிறது என்று பிரதமர் கூறினார்.

தொழில் அதிபர்கள் போட்டியிடும் திறன் உள்ளவர்களாகவும் சுய-காலில் நிற்பவர்களாகவும் இருத்தல் வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.

“நிறைய போட்டியிட வேண்டும்.ஆனால், போட்டியிடுவதற்கு மலிவான தொழிலாளர்களை நம்பி இருக்கக்கூடாது. மலிவான தொழிலாளர்களையும் குறைந்த விலை எண்ணெயையும் நம்பியிருப்பது நம்(அரசுக்) கொள்கை அல்ல”, என்று நஜிப் குறிப்பிட்டார்.

 

 

TAGS: