சுவா-வுடன் இரண்டாவது விவாதம் நடத்த லிம் ஒப்புக் கொண்டுள்ளார்

பிப்ரவரி மாதம் மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்-குடன் ‘நேரடி’ விவாதத்தை நடத்தியுள்ள டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், ஜுலை 8ம் தேதி தமது பரம அரசியல் எதிரியுடன் இன்னொரு விவாதம் நடத்துவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.

லிம்-மின் பத்திரிக்கைச் செயலாளர் அந்த அழைப்புக் கடிதத்தின் பிரதிகளை இன்று காலை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார்.

என்றாலும் அந்த விவாதத்திற்கு சுவா ஒப்புதல் கொடுத்துள்ளாரா என்பது இது வரை தெரியவில்லை.

‘லிம் சுவா விவாதம் 2.0’ என்னும் தலைப்பைக் கொண்ட அந்தக் கடிதத்தில் அஸ்லி என அழைக்கப்படும் ஆசிய வியூக, தலைமைத்துவ ஆய்வுக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கல் இயோ கையெழுத்திட்டுள்ளார்.

அந்த விவாதம் ஜுலை எட்டாம் தேதி பிற்பகல் மணி 2.0 லிருந்து மாலை மணி 4.30 வரை நடைபெறும் என்று மட்டுமே அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்படுள்ளது. விவாதம் நிகழும் இடம், எந்த மொழியில் அது நடத்தப்படும் என்பது அதில் தெரிவிக்கப்படவில்லை.

விவாதத் தலைப்பு “டிஏபி-யும் மசீச-வும்: சமூகத்துக்கு யாருடைய கொள்கைகள் அதிக நன்மைகளைக் கொண்டு வரும்” என்பதாகும்.

கல்வி, சுகாதார கவனிப்பு, பொருளாதார வளப்பம், சமூகச் சேவை, தேசிய ஒற்றுமை. பொது நலன், வறுமை ஒழிப்பு ஆகியவை மீதான கொள்கைகள் அங்கு பேசப்படும்.

ஆதாய நோக்கமில்லாத சுயேச்சை சிந்தனைக் களஞ்சியமான அஸ்லி முதலாவது லிம்-சுவா விவாதத்திற்கும் ஏற்பாடு செய்தது.

 

TAGS: