பெர்சே 3.0 பேரணியில் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கும் பொறுப்பு மனித உரிமை ஆணைய (சுஹாகாம்)த்துக்குத்தான் உண்டு என்கிறது வழக்குரைஞர் மன்றம்.
எனவே, அப்பேரணிமீது விசாரணை நடத்த அரசு-ஆதரவுபெற்ற சுயேச்சை விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருப்பது பொருளற்றது என்றது கூறியது.
“சட்டப்பூர்வமாகவும் சுயேச்சையாகவும் செயல்படும் சுஹாகாம், தான் விசாரணை நடத்தப்போவதாக அறிவித்துள்ள நிலையில் இந்த விசாரணைக் குழுவும் விசாரணையில் ஈடுபடுவது பொருத்தமற்றதாகும்”, என வழக்குரைஞர் மன்ற உதவித் தலைவர் கிரிஸ்டபர் லியோங் கூறினார்.
இன்று மலேசியாகினிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் இரண்டு விசாரணைகள் எதற்காக என்றவர் வினவியிருந்தார்.
“அந்த விசாரணையை நடத்த பொருத்தமான அமைப்பு சுஹாகாம்தான் -அதற்கு அதில் அனுபவம் உண்டு.அதிகாரமும் சட்டப்பூர்வ தகுதியும் உண்டு.1999ஆம் ஆண்டு சுஹாகாம் சட்டம் அதை வழங்குகிறது”, என்றாரவர்.
நேற்று, விசாரணைக் குழுத் தலைவரும் முன்னாள் போலீஸ் படைத்தலைவருமான முகம்மட் ஹனிப் ஒமார், விசாரணையின் தொடர்பில் வழக்குரைஞர் மன்றத்தையோ மற்ற தரப்புகளையோ சந்திக்கத் தயார் என்று கூறினார்.
மலேசிய வழக்குரைஞர் மன்றம் மே 10-இல் அவசரப் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தி அதில் விசாரணைக்குழுவுக்கு ஐநா சிறப்பு அதிகாரி ஒருவர்தான் தலைமை தாங்க வேண்டும் என்று வலியுறுத்தியது.அப்படிச் செய்யாவிட்டால் அதன் விசாரணையில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் கூறியது.
ஹனிப் அதற்குத் தலைமைதாங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மன்றம், அக்குழுவுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என்றும் சாட்சிகளையோ ஆவணங்களையோ வரவழைக்கும் அதிகாரம் அதற்கில்லை என்றும் கூறிற்று.
“சுகாஹாமின் விசாரணையில் பங்கேற்கப் போவதாக வழக்குரைஞர் மன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. இரட்டை விசாரணை தேவையில்லை என்றே அது கருதுகிறது”, என்று லியோங் கூறினார்.
என்றாலும் இது பற்றி விவாதிக்க ஹனிபைச் சந்திக்க வழக்குரைஞர் மன்றம் எப்போதும் தயாராக உள்ளது என்றும் அவர் சொன்னார்.