பெர்சே 3.0 இயக்கத்தின் இணைத் தலைவர் அம்பிகாவின் மீது நடத்தப்பட்ட தனிப்பட்ட முறையிலான தாக்குதல்கள் இனவாதமற்றது, அது அவர் பெர்சேயின் தலைவர் என்ற முறையில் நடத்தப்பட்டது என்று மனிதவள அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறினார்.
அந்தச் சம்பவங்கள், புக்கிட் டாமன்சாராவிலுள்ள அவரது வீட்டின்முன் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் உட்பட, மஇகா, அம்னோ மற்றும் எம்சிஎ ஆகியவற்றால் ஆதரிக்கப்படவில்லை என்றாரவர்.
“அவ்வாறான ஆர்ப்பாட்டங்களுக்கு அவர்களின் நிராகரிப்பை அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆம், அம்பிகா நமது சமூகத்தின் ஓர் அங்கம் ஆனால் அந்த இயக்கத்தில் அவர் ஏற்றுள்ள பங்கிற்காக பொதுமக்கள் அவர்களுடைய கோபத்தை அவர்மீது காட்டியுள்ளனர்”, என்று இன்று கோலாலம்பூரில் கூறினார்.
அம்பிகா மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் இனவாத நோக்கம் கொண்டதா என்று அவரிடம் வினவியபோது, சுப்ரமணியம் இவ்வாறு கூறினார்.
“பிரச்னை என்னவென்றால் அவர்கள் தங்களுடைய கருத்தை ஓர் இடத்தில் மட்டுமல்லாமல் நாடு முழுவதிலும் தெரிவிப்பதற்கான சந்தர்ப்பத்தை அரசாங்கம் அவர்களுக்கு வழங்கியது. நமக்கு தெருமுனைப் போராட்டங்கள் தேவையில்லை”, என்று கூறிய அவர், பெர்சே பேரணி ஓர் அரசியல் ஆயுதமாக பல்வேறு தரப்பினரால் பயன்படுத்தப்பட்டது என்று மேலும் கூறினார்.
எதிரணியினர் இந்தியர்களுக்கு உதவுவதாக அளிக்கும் எந்த ஓர் உதவியும் நடவடிக்கையும் கபடமற்றதல்ல, அவை அரசியல் நோக்கம் கொண்டவை என்பதை இந்திய சமூகம் உணரத் தொடங்கியுள்ளது என்பதை அவர் வெளிப்படுத்தினார்.
சமீபத்தில் பிரிக்பீல்ட்ஸ்சில் அச்சமூகம் நடத்திய பேரணி 2007 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அந்த அளவிற்கு ஆதரவைப் பெறவில்லை என்றார்.
“அவர்கள் எதிர்பார்த்த ஆதரவு அவர்களுக்கு கிடைக்கவில்லை மற்றும் இது வாக்குகள் திரட்டுவதற்கான எதிரணியின் முயற்சி என்று அங்கு சென்ற இந்திய ஆதரவாளர்கள் எண்ணினர் என்று தம்மிடம் கூறப்பட்டது”, என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கு எடுத்துக்காட்டாக, இந்தியர்கள் அடையாள அட்டைகள் பெறுவதற்கான பதிவு திட்டம் ஒன்றை எதிரணியினர் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் பதிவு நடவடிக்கை தொடங்குவதற்கு முன்னர் அங்கு சென்றவர்கள் அன்வார் இப்ராகிம் மற்றும் இதர் எதிரணித் தலைவர்களின் பரப்புரையைக் கேட்குமாறு வற்புறுத்தப்படனர் என்று சுப்ரமணியம் தெரிவித்தார்.
“அவர்களின் அடையாள அட்டை திட்டத்தில் தேசிய பதிவு இலாகாகூட சம்பந்தப்படவில்லை. இது எங்களுடைய முறைக்கு மாறுபட்டது, நாங்கள் அரசியல் செராமா நடத்துவதில்லை”, என்றாரவர்.
“இதனால், இந்திய சமூகத்தில் 6,000 பேரின் அடையாள அட்டை பற்றிய பிரச்னையைத் தீர்த்துள்ளோம் என்ற கூறிய அவர், அரசாங்கம் அதன் பலவீனங்களைக் கொண்டிருந்தபோதிலும், பாரிசான் நேசனல் தலைவர்கள் அடிமட்ட அளவிற்கு சென்றுள்ளனர் என்பதோடு குறைபாடுகளைத் தொடர்ந்து கலைந்து வருகிறார்கள் என்று மேலும் கூறினார்.
-பெர்னாமா