சியாச்சினில் புதையுண்ட பாகிஸ்தான் வீரர்கள் தியாகிகளாக அறிவிப்பு

சியாச்சின் மலையில், பனிப் பாறையில் சிக்கி பலியான பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் தியாகிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள சியாச்சின் பனி மலையில், ஜியாரி என்ற இடத்தில், கடந்த மாதம் 7-ஆம் தேதி, ஆயிரம் மீட்டர் நீளமும், 25 மீட்டருக்கும் அதிகமான அகலமும் கொண்ட பனிப் பாறை சரிந்து, பாகிஸ்தான் வீரர்கள் முகாம் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில், 124 வீரர்கள் உட்பட, 139 பேர் பனிப் பாறை சரிவில் புதையுண்டனர். புதையுண்ட வீரர்கள் மீது, 80 அடி உயரத்துக்கு, பனித் துகள்கள் குவிந்துள்ளன. மீட்புப் பணிகள் இன்னும் தொடர்கின்றன. சில வீரர்களின் சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டன. புதையுண்டவர்கள், இனியும் உயிர் பிழைத்திருப்பதற்கு வாய்ப்பில்லை என்பதால், அவர்களை தியாகிகளாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.