நிஜார்: என்னுடைய டிவிட்டர் செய்தி யாரையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன்

அண்மையில் ஜோகூர் சுல்தான் ‘WWW 1’ கார் எண்ணை 520,000 ரிங்கிட்டுக்கு வாங்கியதை குறை கூறிய தமது டிவிட்டர் செய்தி யாரையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவும் முன்னாள் பேராக் மந்திரி புசார் நிஜார் ஜமாலுதின் தயாராக இருக்கிறார்.

“அந்த டிவிட்டர் செய்தி தங்களைப் புண்படுத்தியுள்ளதாக எந்தத் தரப்பும் கருதினால் அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்,” என நேற்று அவர் மலாய் நாளேடான சினார் ஹரியானிடம் கூறினார்.

அந்தச் செய்தி, மிகவும் விலை உயர்ந்த கார் எண் பட்டையை ஏலத்தில் எடுத்த ஜோகூர் சுல்தான் முடிவு குறித்து கேள்வி எழுப்பவில்லை என அந்த புக்கிட் கந்தாங் எம்பி விளக்கினார்.

அதற்கு மாறாக குடிமகன் ஒருவருடைய பொதுவான அறிக்கை என்றார் அவர்.

“நான் சுல்தானை அவமானப்படுத்தி விட்டதாக சிலர் என் மீது குற்றம் சாட்டுகின்றனர். அது மிக அதிகம். காரணம் அவ்வாறு செய்யும் எண்ணம் எனக்கு அறவே இல்லை.”

“இந்த நாட்டின் சூழ்நிலையைப் பார்க்கின்ற சாதாரண குடிமகன் என்ற முறையில் என்னுடைய கருத்து ஆகும்,” என நிஜார் சொன்னார்.

பலர் இன்னும் சிரமமான சூழ்நிலைகளில் வாழ்கின்றனர் என்றும்  அவர்கள் கவனிக்கப்பட வேண்டும் என்றும் அவர் அந்தச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

‘WWW 1’ கார் எண் பட்டையைப் பெறுவதற்கு ஏலம் கேட்டவர்கள் பட்டியலில் ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மார்ஹும் சுல்தான் இஸ்காண்டார் முதலிடம் வகித்தது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அந்த கார் எண்ணைப் பெறுவதற்கு அவர் குறிப்பிட்ட விலை 520,000 ரிங்கிட் ஆகும். அந்த விலை 2010ம் ஆண்டு ‘MCA 1’ என்ற கார் எண் 300,100 ரிங்கிட்டுக்கு விற்கப்பட்டதைக் காட்டிலும் மிக அதிகமாகும். ஒரு சாதனையுமாகும்.

சுல்தான் அந்த எண்ணை வாங்கியதை இணைய உலகில் பலர் குறை கூறிய போதிலும் சில அரசியல்வாதிகள் மட்டுமே தங்கள் எதிர்ப்பைத் துணிச்சலாக வெளிப்படுத்தியுள்ளனர்.

காரணம் அரச குடும்பத்தினரைக் குறை கூறுவது அவர்களை அவமரியாதை செய்வதற்கு ஒப்பாகும் என பழமைப் போக்குடைய மலாய்க்காரர்கள் கருதுகின்றனர்.

வறுமையில் உள்ளவர்களுக்கு வீடுகள்

ஆனால் நிஜார் தமது டிவிட்டார் செய்தியில் அந்த 520,000 ரிங்கிட் ஜோகூரில் ஏழ்மையில் உள்ள பல மலாய்க்காரர்களுக்கு உதவி செய்யவும் வறுமையில் உள்ளவர்களுக்கு 20 வீடுகளைக் கட்டிக் கொடுக்கவும் செலவு செய்யப்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதற்குப் பதில் அளித்த ஜோகூர் பட்டத்து இளவரசர், அரசாங்கத்திடமிருந்து தமது குடும்பம்  பணத்தை ஒரு போதும் எடுத்ததில்லை எனக் கூறி தமது தந்தையான சுல்தான் அந்த கார் எண்ணை வாங்கியதை தற்காத்துப் பேசினார். 

நிஜார் தமது டிவிட்டர் செய்தி மூலம் அரச குடும்பத்தை அவமானப்படுத்தியிருப்பதாகவும் அரச குடும்பத்துக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டியிருப்பதாகவும் நேற்று குற்றம் சாட்டிய அம்னோ பெங்கெராங் எம்பி அஸாலினா ஒஸ்மான் அதற்காக நிஜார்  சு்ல்தானிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும்   கோரியிருந்தார்.

TAGS: