“அடுத்த பொதுத் தேர்தலை சேர்ந்தே முடிவு செய்ய வேண்டும்”

அரசாங்கம், மாற்றரசுக் கட்சியுடன் ஆலோசனை கலந்த பின்னரே பொதுத் தேர்தலுக்கான தேதியை முடிவு செய்ய வேண்டும் என்று பக்காத்தான் ரக்யாட் கோரிக்கை விடுத்துள்ளது. உத்தேச நாடாளுமன்றக்குழு (பிஎஸ்சி) அதன் பணியைச் செய்வதற்குப் போதுமான கால அவகாசம் வழங்கும் பொருட்டு அவ்வாறு செய்யப்படுவது அவசியம் என்றது நினைக்கிறது.

பிஎஸ்சி-இல் சேர்வதற்கு பக்காத்தான் விதித்துள்ள ஐந்து நிபந்தனைகளில் இதுவும் ஒன்றாகும். இந்த ஐந்தையும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஏற்றுக்கொண்டால் மட்டுமே பிஎஸ்சி-யில் சேர்வது பற்றி முடிவெடுக்க முடியும் என்றது கூறியது.

“13-வது பொதுத் தேர்தலுக்கான தேதியை பிஎன்னும் பக்காத்தானும் சேர்ந்தே முடிவு செய்ய வேண்டும். அதாவது பிஎன், பக்காத்தான் இரண்டும் ஒப்புகொண்டபின்னரே நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும்”, என்று பாஸ் உதவித்தலைவர் சலாஹுடின் ஆயுப்(இடம்) கூறினார்.

அவர் இன்று காலை, கோலாலம்பூரில், பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார், டிஏபி இளைஞர் தலைவர் அந்தோனி லோக், பக்காத்தான் எம்பிகள் ஆகியோருடன் சேர்ந்து நடத்திய கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

இது ஒன்றும் மக்களாட்சி நாடுகளில் இதுவரை நடந்திராத ஒன்றல்ல என்றவர் விளக்கினார். 

“பிரிட்டனில் கன்சர்வேடிப் கட்சியும் லிபரல் ஜனநாயகக் கட்சியும் பொதுத் தேர்தலுக்கான தேதியைச் சேர்ந்தே முடிவு செய்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கின்றன. இதனால் அடுத்த தேர்தல் எப்போது என்பது அனைவருக்கும் தெரிந்து விடுகிறது”, என்றாரவர்.

பக்காத்தானின் மற்ற நிபந்தனைகள் வருமாறு:

-பிஎஸ்சி, பெர்சே-இன் எட்டுக் கோரிக்கைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

-பிஎஸ்சி அதன் பணியைச் செய்து முடிக்க போதுமான  கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும்.

-பிஎஸ்சி, அந்நியருக்குக் குடியுரிமை கொடுக்கப்பட்ட விவகாரம் குறித்தும் பரிசீலிக்க இடமளிக்க வேண்டும்.

-பிஎஸ்சி முன்வைக்கும் பரிந்துரைகள் எல்லாவற்றையும் அரசு நிறைவேற்ற வேண்டும்.

இந்நிபந்தனைகள் தொடர்பில் விரைவில் பிரதமருக்குக் கடிதம் அனுப்பும் பக்காத்தான், அக்டோபர் 3 நாடாளுமன்றக் கூட்டத்தில் பிஎஸ்சி அமைக்கப்படுவதற்கு முன்னதாக மறுமொழியை எதிர்பார்க்கும் என்றும்  சலாஹூடின் கூறினார்.

தேர்தல் சீரமைப்பில் அரசுடன் ஒத்துழைக்க பக்காத்தான் ஆயத்தமாக உள்ளதென்று அந்த கூப்பாங் கிரியான் எம்பி கூறினார். அதே வேளையில் நஜிப் நிபந்தனைகளை ஏற்காவிட்டால் பக்காத்தான் என்ன செய்யும் என்பதை அவர் விவரிக்க மறுத்தார்.

“நமக்கு 2013 மார்ச் 8 வரை அவகாசம் இருக்கிறது(நாடாளுமன்றத்தைக் கலைக்க).நஜிப் ,நேர்மையானவராக இருந்தால், தேர்தல் சீரமைப்பில் உண்மையில் அக்கறை கொண்டவராக இருந்தால், போதுமான கால அவகாசம் இருக்கிறது…..நாடாளுமன்றத்தைக் கலைக்க அவசரப்பட வேண்டியதில்லை……அரசமைப்பை மாற்ற வேண்டியது அவசியம் என்றால் அதிலும்  ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம்.

“அதனால், மறுமொழி கூறுங்கள். நாங்கள் (பிஎஸ்சி-யில் சேர்வது பற்றி) முடிவு செய்ய வசதியாக இருக்கும்”, என்றார்.

நூருல் இஸ்ஸாவும் அரசுக்கும் மாற்றர்சுக் கட்சிக்குமிடையில் அணுக்கமான ஒத்துழைப்பு அவசியம் என்று வலியுறுத்தினார்.

“இதுவரை செய்தியறிக்கைகள் வழியாகத்தான் தகவல் வந்து கொண்டிருக்கிறது. நேரடிப் பேச்சு இல்லை. நாங்கள் ஒத்துழைக்க ஆயத்தமாக இருக்கிறோம். (நடப்பில் சட்ட அமைச்சர் முகம்மட்) நஸ்ரி(அப்துல் அசீஸ்) எங்களுடன் நேரடித் தொடர்புகொள்வதை விரும்புகிறோம்”.

“எதிர்வரும் பொதுத் தேர்தலை”முன்னிட்டு  தேர்தல் நடைமுறைகளைச் சீரமைக்க நாடாளுமன்றக் குழு அமைக்கப்படும் என ஆகஸ்ட் 15-இல் நஜிப் அறிவித்தார். பின்னர் நான்கு நாள் கழித்து அவரே, அடுத்த தேர்தல் பிஎஸ்சி அதன் பணியைச் செய்து முடிக்கும்வரை காத்திருக்காது என்றும் கூறினார்.

இது, மாற்றரசுக் கட்சிக்கூட்டணிக்கு ஆத்திரமூட்டியது. அதனால், நாடாளுமன்றக் குழுவில் தான் இடம்பெற வேண்டுமானால் அக்குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும் எனப் பிரதமர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறது.

TAGS: