தங்களுக்கு புக்கிட் ஜாலில் தோட்டத்தில் நான்கு ஏக்கர் நிலம் வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கை சம்பந்தமாக பிரதமர் நஜிப்பை சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது அலுவலகத்தின் முன் புக்கிட் ஜாலில் தோட்டத்தின் முன்னாள் தொழிலாளர்கள் முகாமிட்டுள்ளனர்.
காலை மணி 11.00 அளவில் பிரதமர் அலுவலகத்தின் முன் அத்தொழிலாளர்களின் குடும்ப மற்றும் ஆதரவாளர்களின் பிரதிநிதிகள் சுமார் 50 பேர் கூடினர். பின்னர் மழையின் காரணமாக 50 மீட்டருக்கு அப்பாலுள்ள கூடாரத்திற்குச் சென்றனர்.
அங்கிருந்த போலீசார் அவர்களுக்கு எவ்விதத் தடங்களும் ஏற்படுத்தவில்லை. பிரதமர் அவர்களைச் சந்திக்கும் வரையிலும் அவர்களின் வீடுகள் சம்பந்தமான பிரச்னைகள் தீர்க்கப்படும் வரையிலும் அவர்கள் பிரதமர் அலுவலகத்தின் முன் தங்கியிருக்க திட்டமிட்டுள்ளனர்.
மலேசிய சோசலிசக் கட்சியின் தலைமைச் செயலாளர் எஸ்.அருட்செல்வன் மற்றும் முன்னாள் தோட்டத் தொழிலாளர்களின் பிரதிநிதி கே.பாலகிருஷ்ணன் ஆகியோரின் தலைமையில் ஐந்து பிரதிநிதிகள் கூட்டரசு பிரதேசம் மற்றும் நகர நல்வாழ்வுதுறை அமைச்சு மற்றும் பிரதமர் அலுவலக பிரதிநிதிகளை பிற்பகல் மணி 1.00 க்கு சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அண்மையச் செய்தி
கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருட்செல்வம் நிலம் வேண்டும் என்ற அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாக அவர்கள் உணர்கின்றனர் ஏனென்றால் அவர்கள் நஜிப்பை சந்திப்பதற்காக அங்கு வந்தனர். அந்த சந்திப்பில் பிரதமர் அலுவலக அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் என்றும் எதிர்பார்த்தார்கள் என்று அருட்செல்வன் கூறினார்.
ஆனால், கூட்டரசு பிரதேசம் மற்றும் நகர் நல்வாழ்வுத்துறை அமைச்சின் இரு பிரதிநிதிகள் – காசிம் ஹம்சா மற்றும் அடி ரோஸ்லான் – மட்டுமே கூட்டத்திற்கு வந்திருந்தனர். இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவற்றை பிரதமர் அலுவலத்திற்கு தெரிவிக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர்.
“நாங்கள் மிக உயர்ந்த அளவிலான தொழிலியத்தை எதிர்பார்த்தோம்”, என்று கூறிய அருட்செல்வம், அச்சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவு மற்றும் பிரதமர் அலுவலக பிரதிநிதிகள் பங்கேற்காதது குறித்து ஏமாற்றம் தெரிவித்தார்.
கோரிக்கையை ஏற்க முடியாது என்றால், அதனை எழுத்து மூலம் தெரிவித்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
தொழிலாளர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் அவர்களுடையப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு அவர்களே தொடர்ந்து போராடுவர் என்று மேலும் கூறினார்.
இதனிடையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அருகிலுள்ள கூடாரத்தில் தங்கியிருக்க தீர்மானித்துள்ளனர். மழை நின்றால், அலுவலகத்தின் முன் அவர்கள் கூடக்கூடும்.