கேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி 1995ம் ஆண்டு ‘ஊழலுக்காக விசாரிக்கப்பட்டதை’ நிரூபிக்கும் ரகசிய அறிக்கை தமக்கு கிடைத்துள்ளதாக பிரபல வலைப்பதிவாளர் ராஜ பெத்ரா கமாருதின் கூறியுள்ளது தொடர்பில் எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் போலீசில் புகார் செய்துள்ளது.
பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், அஸ்மினுக்கு எதிரான விசாரணையை நிறுத்தி விட்டதாகவும் ராஜா பெத்ரா கூறியுள்ளது பற்றியும் விவாதிக்க நாளை எம்ஏசிசி-யின் நடவடிக்கை மதிப்பீட்டுக் குழு கூடும்.
அன்வார் அப்போது துணைப் பிரதமராக இருந்தார். அஸ்மின் அவருடைய தனிப்பட்ட செயலாளராக பணியாற்றினார்.
அந்தக் குற்றச்சாட்டுக்களை விவாதித்து அவற்றை விசாரிப்பதா இல்லையா என்பதை அந்தக் குழு முடிவு செய்யும் என எம்ஏசிசி புலனாய்வுப் பிரிவு இயக்குநர் முஸ்தாபார் அலி, பெரித்தா ஹரியானிடம் கூறினார்.
“அது பழைய விவகாரமாக இருந்தாலும் கிரிமினல் விசாரணைக்கு காலக் கெடு ஏதுமில்லை.”
நேற்றிரவு புத்ராஜெயா போலீஸ் நிலையத்தில் அந்தப் புகார் சமர்பிக்கப்பட்டது என்றார் அவர்.
“நாங்கள் நடவடிக்கை மதிப்பீட்டுக் குழுவிடம் நாளை அறிக்கை சமர்பித்த பின்னர் அந்த விவகாரம் சம்பந்தமான மேல் விவரங்கள் தெரிய வரும்,” என்றும் முஸ்தாபார் சொன்னார்.
“அஸ்மின் ஊழல் சம்பந்தப்பட்டுள்ளதை’ நிரூபிக்கும் ஆவணங்கள் தமக்குக் கிடைத்துள்ளதாக ராஜா பெத்ரா நேற்று தமது இணையத் தளமான மலேசியா டுடே-யில் தகவல் வெளியிட்டிருந்தார்.
ஊழல் அதிகாரிகளை அம்பலப்படுத்த விரும்பிய, மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ள ஒய்வு பெற்ற எம்ஏசிசி அதிகாரி தம்மிடம் ‘நூற்றுக்கணக்கான ஆவணங்களைக் கொண்ட கனமான கோப்பை’ கொடுத்ததாக ராஜா பெத்ரா கூறிக் கொண்டார்.
போலீஸ் புகார்கள், புலனாய்வு அறிக்கைகள், பதிவு செய்யப்பட்ட கையெழுத்திடப்பட்ட வாக்குமூலங்கள், கூட்டக் குறிப்புக்கள், கணக்கு அறிக்கைகள், காசோலைகளின் பிரதிகள், பற்றுச் சீட்டுக்கள், ஒப்பந்தக் குறிப்புக்கள் ஆகியவை அந்தக் கோப்பில் இருப்பதாகவும் அவர் கூறிக் கொண்டார்.
அஸ்மின் மில்லியன் கணக்கான ரிங்கிட் சம்பந்தப்பட்ட ஊழல் மீது அஸ்மினைக் கைது செய்யவும் வழக்குத் தொடரவும் வலுவான ஆதாரங்களை அப்போதைய ஊழல் தடுப்பு நிறுவனம் ( இப்போது எம்ஏசிசி) திரட்டியுள்ளதை அந்தக் கோப்பு உணர்த்துவதாகவும் ராஜா பெத்ரா குறிப்பிட்டார்.
ஆனால் அன்வார் உத்தரவிட்டதாக கூறப்பட்ட பின்னர் மேல் நடவடிக்கை இல்லை என முத்திரையிட்டு அப்போதைய தலைமை இயக்குநர் ஷாபீ யாஹாயா அந்தக் கோப்பை புதைத்து விட்டதாகவும் அவர் சொல்லிக் கொண்டார்.