13வது பொதுத் தேர்தலில் அரசியல் கேலிச்சித்திரங்களுக்குத் தடை

13வது பொதுத் தேர்தலில் தனிப்பட்டவர்களைச் சித்திரிக்கும் கேலிச்சித்திரங்களைத் தாங்கிய சுவரொட்டிகள் அல்லது தோரணங்களைப் பயன்படுத்த வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு நினைவுபடுத்தப்பட்டுள்ளது.

2011 சரவாக் தேர்தலின்போது, பரப்புரைக்குப் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் தனிப்பட்டவர்களையும் முக்கிய பிரமுகர்களையும் கேலி செய்யும் விதத்தில் இருந்தன என்று தேர்தல் ஆணைய(இசி)த் துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார் கூறினார்.

அவை பொருத்தமற்றவை என்பதுடன் தேர்தலின்  முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கவில்லை என்றாரவர்.

“தேர்தல் முக்கியமான ஒன்று. அதில் அரசியல் கட்சிகள் எந்தவொரு மனிதரையும் கேலிசெய்ய இடமளிக்க முடியாது”.வான் அஹ்மட், இன்று செனாயில், மாநில-அளவிலான தேர்தல் பரப்புரை அமலாக்கக் குழுக்களுக்கு(பிபிகேபிஆர்) விளக்கம் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்படிப்பட்ட சுவரொட்டிகள் அல்லது தோரணங்கள் பயன்படுத்தப்பட்டால் இசி, 1958ஆம் ஆண்டு தேர்தல் சட்டத்தைப் பயன்படுத்தி அவற்றை அகற்றும்.

அது ஒரு நல்ல முடிவு என்று குறிப்பிட்ட வான் அஹ்மட் அது போட்டியிடும் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிம்பம் களங்கப்படுத்தப்படாமல் காக்கும் என்பதுடன் தேர்தல் சுவரொட்டிகள் வைப்பதில் ஓர் ஒழுங்கையும் உருவாக்கும் என்றார்.

இதனிடையே, ஜோகூரில் தேர்தல் பரப்புரைக் காலத்தில் நாடாளுமன்றத் தொகுதிகளைக் கண்காணிக்கவும் அமலாக்கப் பணிகளை மேற்கொள்ளவும் 26 பிபிகேபிஆர்-கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஜோகூரில் 1.5மில்லியன் வாக்காளர்கள் உள்ளனர்.அவர்களில் 22,000பேர் ஆயுதப்படைகளிலும் போலீசிலும் பணி புரிபவர்கள் அல்லது வெளிநாடுகளில் இருப்பவர்கள்.அவர்கள் முன்கூட்டியே வாக்களிப்பர்.

-பெர்னாமா

 

 

TAGS: