எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளி நிலத்துக்கு மஇகா கட்டிய பிரிமியம் திருப்பித்தரப்படும்

எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளிக்காக மேம்பாட்டு நிறுவனத்தால் ஒதுக்கப்பட்ட ஆறு ஏக்கர் நிலத்தில் ஒரு பகுதியை எடுத்துக்கொண்ட மஇகா  அந்நிலத்தைத் தமிழ்ப்பள்ளியிடம் திரும்பத் தந்தால், சிலாங்கூர் மாநில அரசும்  நிலத்துக்காக மஇகா கட்டிய பிரிமியத்தை திரும்பத்தரும்.

இன்று, மே 30 ஆம் நாள், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இந்த நில விவகாரத்தால் அதன் கௌரவம் பாதிக்கப்படும் என்றோ மஇகாவை திருடர்கள் கட்சி என்று மக்கள் சாடுவார்கள் என்றோ தவறை மறைக்க முயற்சிக் கூடாது. ஏதோ எடுத்து விட்டார்கள், எடுத்ததைக் கொடுத்து விட்டார்கள் என்று மறந்து விடுவோம். பக்காத்தான் மஇகாவுக்கு இந்த அளவுக்குதான் உதவ முடியும் என்றாரவர்.
“வண்டி எப்போதும் ஒரே திசையிலேயே ஓடாது. தவறு செய்தால் தண்டனை உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மக்களைத் துச்சமாக எண்ணி சமுதாயத்தின் சொத்துகளைச் சூறையாடுபவர்கள் ஒரு நாள் மக்களுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும். இனி வரும் காலங்களில்  அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இது சரியான பாடமாக இருக்கட்டும்”, என்றார் சேவியர்.
நிலத்தைத் திரும்ப ஒப்படைக்கத் தவறினால் நில மீட்புக்குழுவின் கடுமையான அடுத்தக்கட்ட போராட்டத்தை மஇகா எதிர்கொள்ள நேரிடும். அதனால் அது நாடு முழுவதிலும் பலத்த எதிர்ப்பையும், அவமானத்தையும் அரசியல் செல்வாக்கு இழப்பையையும் சந்திக்க நேரிடும் என்பதால் இந்த அரிய வாய்ப்பைப் பயன் படுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்று டாக்டர் சேவியர்  ஜெயக்குமார் மஇகாவுக்கு அழைப்பு விடுத்தார்.

 

TAGS: