ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்படுவதற்குக் காரணமான உள்நாட்டுப் போருக்கு உதவிய மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவின் முன்னாள் அதிபர் சார்லஸ் டெய்லருக்கு 50 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து ஐ.நா. நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது.
அண்டை நாடான சியாரா லியோனில் செயல்பட்ட புரட்சிகர ஐக்கிய முன்னணி என்கிற தீவிரவாத அமைப்புக்கு ஆயுதங்கள், நிதி உள்ளிட்டவற்றை டெய்லர் வழங்கினார். இதற்குப் பதிலாக, அடிமைத் தொழிலாளர்களைக் கொண்டு இயங்கும் சுரங்கங்களிலிருந்து தோண்டியெடுக்கப்படும் வைரங்களை டெய்லருக்கு வன்முறையாளர்கள் வழங்கி வந்தனர் என்று குற்றம்சாட்டப்பட்டது.
ஈவிரக்கமற்ற கொலை, பலாத்காரம், பாலியல் அடிமைகளை வைத்திருந்தது, கை, கால்கள வெட்டுவது, குழந்தைகளை சண்டையில் ஈடுபடுத்துவது போன்ற பல்வேறு பயங்கரமான குற்றங்களை புரட்சிகர ஐக்கிய முன்னணி செய்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
“இந்தக் குற்றங்களுக்கு உதவியது, தூண்டிவிட்டது ஆகியவற்றுக்கு டெய்லரே பொறுப்பாகிறார்” என்று வழக்கை விசாரித்த சியாரா லியோனுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரிச்சர்ட் லூசிக் கூறினார். இந்த நீதிமன்றம் தி ஹேக் நகரின் புறநகரப் பகுதியில் செயல்பட்டு வருகிறது.
நீதிபதி தீர்ப்பை வாசித்தபோது, கண்களை மூடியபடி டெய்லர் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு மேல்முறையீடு செய்ய இருவார கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.
1946-ம் ஆண்டில் நாஜிக்கள் மீதான வழக்குக்குப் பிறகு போர்க்குற்றங்களுக்காக ஒரு நாட்டின் முன்னாள் அதிபருக்கு அனைத்துலக நீதிமன்றம் தண்டனை வழங்குவது இதுவே முதல் முறையாகும்.