மலேசிய அரசாங்கம் கொள்முதல் செய்யவிருக்கும் ஸ்கார்ப்பியோன் ரக நீர்மூழ்கிக் கப்பல் குறித்த மலேசியக் கடற்படையின் மதிப்பீடான- மிகவும் ரகசியமான ஆவணத்தை பிரஞ்சு தற்காப்பு நிறுவனம் ஒன்று ‘விலைக்கு வாங்கியதாக’ கூறப்படுகிறது.
‘வர்த்தக பொறியியல்’ வேலைகள் என்ற பெயரில் Terasasi (Hong Kong) Ltd என்னும் நிறுவனத்துக்கு அந்த பிரஞ்சு நிறுவனம் 36 மில்லியன் யூரோவை (142 மில்லியன் ரிங்கிட்) கொடுத்ததாகக் கூறப்படுகிறது என மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராம் சார்பில் வாதாடும் பிரஞ்சு வழக்குரைஞர் ஜோசப் பிரெஹாம் கூறினார்.
ஊழல் நடவடிக்கைகள் எனக் கூறப்படுவது மீது டிசிஎன்எஸ் என்ற பிரஞ்சு கப்பல் கட்டும் நிறுவனத்தின் மீது சுவாராம் வழக்குத் தொடர்ந்துள்ளது.
டிசிஎன்எஸ் நிறுவனத்திடமிருந்து நிதிப் பரிவர்த்தனைகள் பற்றிய அறிக்கைகளையும் செலுத்தப்பட்ட பணம் பற்றியும் அந்த வழக்கை விசாரிக்கும் பிரஞ்சு விசாரணை நீதிபதிகள் கோரினர் என்றும் பிரெஹாம் சொன்னார்.
“இணையத்திலும் நாளேடுகளிலும் கிடைக்கும் எல்லாத் தகவல்களும் அந்த நீதிபதிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஒரே ஒரு ஆவணம் மட்டும் கொடுக்கப்படவில்லை,” என அவர் பாங்காக்கில் தாய்லாந்து அந்நிய பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் நிருபர்களிடம் கூறினார்.
“மலேசியக் கடற்படை தயாரித்த மிகவும் ரகசிய ஆவணமான-நீர்மூழ்கிகளுக்கான அளிப்பாணைக்கான மதிப்பீடே அதுவாகும்.”
பிரஞ்சு அரசாங்க வழக்குரைஞர் தரப்பு அறிக்கைகள் அடிப்படையில் பிரெஹான் அந்தத் தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார்.
இது போன்று அந்நிய நாடு ஒன்றுக்கு ரகசிய ஆவணங்களை ‘விற்பது’ தேசத் துரோக நடவடிக்கை எனக் கருதப்பட வேண்டும் என்றும் பிரெஹாம் குறிப்பிட்டார்.
பிரான்ஸில் அத்தகைய ஆவணங்களை விற்பது முழுக்க முழுக்க சட்ட விரோதமாகும். அதனை தற்காப்பு ரகசியங்களை வெளியிட்டதாக அல்லது கடுமையான தேசத் துரோகமாக கருதப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அத்தகைய ஆவணங்களை தனிநபருக்கு விற்பது சட்டப்பூர்வமானதா என நிருபர் ஒருவர் அவரிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதில் அளித்த பிரெஹாம்,”நீங்கள் குறிப்பிட்ட ஒர் ஆயுதம் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்பதை ஒர் அந்நிய நாட்டுக்கு அல்லது போட்டியாளருக்கு நீங்கள் விற்பதால் அது தேசத் துரோகமாகும்,” என்றார்.
“பிரான்ஸில் நீங்கள் அத்தகைய ரகசிய ஆயுதங்களை வெளியிட்டால் உங்களுக்கு பத்து ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்,” என அவர் சொன்னார்.
சுவாராம் தொடுத்துள்ள சட்ட நடவடிக்கையில் அதனைப் பிரதிநிதிக்கும் பாரிஸைத் தளமாகக் கொண்ட ஆதாய நோக்கமில்லாத அமைப்பான Sherpa-வை பிரெஹாம் சார்ந்துள்ளார்.
Interpol நஜிப்பை கைது செய்ய முடியும்
மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு நீர்மூழ்கிகள் விற்பனை தொடர்பில் ‘தரகுப் பணத்தை’ தனது கணக்குகள் வழியாக வழங்கியதாக ஹாங்காங்கைத் தளமாகக் கொண்ட Terasasi நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2002ம் ஆண்டு நஜிப் தற்காப்பு அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் இருந்த போது அந்த நீர்மூழ்கிகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் Thales International என்ற பிரஞ்சு நிறுவனத்துடன் கையெழுத்திடப்பட்டது.
அந்த Thales பிரஞ்சுத் தற்காப்புத் தளவாட தயாரிப்பு நிறுவனமான டிசிஎன்-னின் (அது பின்னர் தனது பெயரை டிசிஎன்எஸ்-ஆக மாற்றிக் கொண்டது) துணை நிறுவனமாகும்.
நஜிப்பின் நெருங்கிய நண்பரான அப்துல் ரசாக் பகிந்தா, அவருடைய தந்தை அப்துல் மாலிம் பகிந்தா ஆகியோர் அந்த Terasasi நிறுவனத்தின் இரண்டு இயக்குநர்கள் ஆவர்.
2006ம் ஆண்டு மங்கோலிய பிரஜையான அல்தான்துயா ஷாரிபுவைக் கொலையுண்டது தொடர்பில் நஜிப்பின் இரண்டு முன்னாள் மெய்க்காவலர்கள் மீதும் ரசாக் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் ரசாக் எதிர்வாதம் புரிவதற்கு அழைக்கபடாமலேயே விடுதலை செய்யப்பட்டார்.
அந்த விவகாரம் மீது கருத்துரைக்க மறுத்த நஜிப், அந்த ஊழலில் தாம் சம்பந்தப்படவில்லை என்றும் கூறினார். ஆனால் நஜிப்புக்கு அழைப்பாணை (சபீனா) அனுப்பப்பட்டால் அல்லது இண்டர்போல் என்ற அனைத்துலகப் போலீஸ் கைது ஆணையைப் பிறப்பித்தால் பிரஞ்சு நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பதை பிரதமர் தவிர்க்க முடியாது என பிரெஹாம் சொன்னார்.
நாட்டின் ரகசியங்களை விற்பது குற்றமாகும்
இதனிடையே மிகவும் ரகசியமான ஆவணம் ஒன்று அந்நிய நாடு ஒன்றுக்கு விற்கப்பட்டுள்ளது என்ற தகவல் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது, ஒரு நபரை ஜெயிலுக்குப் போக வைத்து விடக் கூடும் என பாங்காக் நிருபர்கள் சந்திப்பில் உடனிருந்த சுபாங் எம்பி ஆர் சிவராசா கூறினார்.
மலேசியா மிகவும் கடுமையான அதிகாரத்துவ ரகசியக் காப்புச் சட்டத்தை பெற்றுள்ளதாக வழக்குரைஞருமான அவர் சொன்னார்.
அதிகாரத்துவ ரகசியக் காப்புச் சட்டத்தை மீறியுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டால் கட்டாய சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
“பிரெஹாம் குறிப்பிட்டுள்ள ஆவணங்கள் அதிகாரத்துவ ரகசிய ஆவணங்களில் மிக முக்கியமானதாகும்.
காரணம் அது நாட்டின் பாதுகாப்பு மீது தாக்கத்தைக் கொண்டுள்ளது,” என்றார் சிவராசா.
ஸ்கோர்ப்பியோன் ஊழல் எனக் கூறப்படுவது தொடர்பில் ‘அதிர்ச்சியூட்டும் தகவல்களை’ வெளியிடுவதற்காக பிரெஹாம், சுவாராம் இயக்குநர் சிந்தியா கேப்ரியல், வழக்குரைஞர் பாடியா பிக்ரி ஆகியோருடன் சிவராசாவும் சென்றுள்ளார்.
மலேசியாவுக்குள் நுழைவதற்கு பொருத்தமான விசா பிரெஹாமுக்குக் கிடைக்காததால் பாங்காக்கில் நிருபர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பாங்காக் நிகழ்வில் பல அந்நிய நிருபர்களும் மலேசியத் தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.