எம்ஏசிசி: என்எப்சி ஒப்பந்தம் மற்றும் கடனளிப்பில் ஷரிசாட் சம்பந்தப்படவில்லை

முன்னாள் மகளிர், குடும்ப மேம்பாட்டு அமைச்சர் ஷரிசாட் அப்துல் ஜலிலுக்கு, பல-மில்லியன்-ரிங்கிட் பெறும் நேசனல் ஃபீட்லோட் திட்டம் அவருடைய குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டதில் எவ்விதத் தொடர்புமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“அந்நிறுவனத்துக்கு குத்தகை வழங்கப்பட்டதிலும் ரிம250மில்லியன் கடன் வழங்கப்பட்டதிலும் ஷரிசாட் சம்பந்தப்படவில்லை என்பது எங்களின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது”.மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) நடவடிக்கை பரிசீலனை வாரியத்தின் தலைவர் ஹடினான் அப்துல் ஜாலில் இன்று இவ்வாறு அறிவித்தார்.

எனவே, விசாரணையைக் கைவிட வாரியம் முடிவு செய்திருப்பதாக ஹடினான் குறிப்பிட்டார்.

கொடுக்கப்பட்ட கடனை நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) தவறான வழிகளில் பயன்படுத்திக்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஷரிசாட்டின் கணவர் முகம்மட் சாலே இஸ்மாயில்தான் அந்நிறுவனத்தின் தலைவர்அவரின் பிள்ளைகள் அதில் இயக்குனர்கள்.

இவ்விவகாரம் தொடர்பில் ஷரிசாட் ஏப்ரல் 8-இல் தம் செனட்டர் பதவி முடிவுக்கு வந்ததும் அமைச்சர் பதவியைத் துறந்தார்.ஆனால், அம்னோ மகளிர் தலைவியாகவும் பாரிசான் நேசனல் மகளிர் தலைவியாகவும் அவர் தொடர்ந்து இருந்து வருகிறார்.

சர்ச்சைக்குரிய நிறுவனத்துக்கும் அதன் கடன் நிர்வாகத்திலும் தமக்குத் தொடர்பில்லை என்றே அவர் திரும்பத் திரும்பக் கூறி வந்துள்ளார்.

மாட்டிரைச்சி இறக்குமதியைக் குறைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட அத்திட்டத்தின் செயல்பாட்டை ஆராய்ந்த அரசாங்கத் தலைமைக்கணக்காய்வாளர், அது அந்த நோக்கத்துக்கு ஏற்ப செயல்படவில்லை என்று தம் 2010 ஆண்டறிக்கையில் கூறியிருந்தார்.

அதனை அடுத்து என்எப்சி,  அதற்கு எளிய நிபந்தனைகளில் வழங்கப்பட்டிருந்த கடனை அத்திட்டத்துக்குத் தொடர்பில்லாத விசயங்களில் செலவிட்டிருப்பதாகக் குறை கூறப்பட்டது.

மார்ச் மாதம் சாலே, கோலாலம்பூர், பங்சாரில் ஒன் மெனுரோங்கில் இரண்டு சொகுசு கொண்டோமினியங்கள் வாங்க என்எப்சிக்குக் கொடுக்கப்பட்ட கடனில் ரிம9,758,140-ஐ தவறாக பயன்படுத்தினார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

அவர்மீதான வழக்கு நவம்பர் 5-இல் விசாரணைக்கு வருகிறது.

 

TAGS: