பாஸ்: 13வது பொதுத் தேர்தல் சுனாமி அலை தெற்கிலிருந்து வீசும்

13வது பொதுத் தேர்தலில் ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான் ஆகியவற்றில் பக்காத்தான் ராக்யாட் கூடுதல் இடங்களைப் பெற்று தெற்கிலிருந்து சுனாமி அலை வீசத் தொடங்கும் என பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி ஆரூடம் கூறியுள்ளார்.

2008ல் கைப்பற்றிய மாநிலங்களை பக்காத்தான் தக்க வைத்துக் கொள்வதுடன் பேராக், திரங்கானுவிலும் மீண்டும் வெற்றி பெறும் என அவர் சினார் ஹரியான் நாளேட்டுக்கு இன்று வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான் ஆகியவையும் பக்காத்தான் பிடிக்கும் என்றும் அவர் துணிச்சலாக ஆரூடம் கூறினார். அதே வேளையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சொந்த பாகாங் மாநிலத்திலும் கூடுதலாக பல இடங்களைக் கைப்பற்றும் என்றும் அவர் சொன்னார்.

“சுனாமி தெற்கிலிருந்து தொடங்கும். வடக்கில் வீசிய சுனாமியில் எந்த மாற்றமும் இருக்காது. ஆகவே அது தெற்கிலிருந்து வீசும்,” என்றார் அவர்.

நஜிப்பின் செல்வாக்கு எனக் கூறப்படுவது பற்றிப் பாஸ் கவலைப்படவில்லை என்றும் முஸ்தாபா குறிப்பிட்டார். காரணம் அது முக்கிய நாளேடுகளினால் செயற்கையாக உருவாக்கப்பட்டது.

முன்னாள் தலைமைச் செயலாளர் ஒருவர் உட்பட பல முன்னாள் அரசு ஊழியர்கள் பாஸ் கட்சியில் இணைய விருப்பம் கொண்டுள்ளதாகவும் அவர் தகவல் வெளியிட்டார்.

அந்தத் தலைமைச் செயலாளர் பெயர் அலோர் ஸ்டாரில் நாளை நிகழும் Perhimpunan Hijau கூட்டத்தில் பகிரங்கமாக அறிவிக்கப்படும்.

நெகிரி செம்பிலான், கிளந்தான், சிலாங்கூர் ஆகியவற்றுக்கான இட ஒதுக்கீட்டுப் பேச்சுக்கள் நிறைவடைந்து விட்டதாகவும் மற்ற மாநிலங்கள் தொடர்பில் விவாதங்கள் தொடருவதாகவும் முஸ்தாபா சொன்னார்.

பாஸ் கட்சி, தனது தோழமைக் கட்சிகளான டிஏபி-க்கும் பிகேஆர்-க்கும் துரோகம் செய்யாது எனவும் அவர் வாக்குறுதி அளித்தார். அம்னோவுடனான ஒத்துழைப்பு விவகாரத்துக்கு முக்கிய நாளேடுகள் தவறாக விளக்கம் கொடுப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

“பக்காத்தானுடன் தொடர்ந்து இணைந்திருப்பதில் பாஸ் கட்சி உறுதியாக இருக்கிறது,” என குறிப்பிட்ட முஸ்தாபா, தொடக்கத்தில் அம்னோ உண்மையாக நடந்து கொள்வதாகத் தோன்றியது. ஆனால் நடப்புத் தலைவர்கள் அப்படி இல்லை என்றார்.

பாஸ் ஆன்மீகத் தலைவரும் கிளந்தான் மந்திரி புசாருமான நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஆகியோர் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவர் என்ற தகவலையும் முஸ்தாபா வெளியிட்டார்.

 

TAGS: