புக்கிட் ஜாலில் தோட்டத்தின் முன்னாள் தொழிலாளர்கள், பிரதமர் அவர்களைச் சந்திப்பார் என வாக்குறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகத்திற்கு முன்பு தாங்கள் நடத்திய போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
அந்தக் கட்டிடத்திற்கு வெளியில் கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக அவர்கள் அந்தப் போராட்டத்தை நடத்தி வந்தனர். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவர்களை தேதி குறிப்பிடப்படாத தேதி ஒன்றில் சந்திப்பதாகக் கூறும் கடிதம் ஒன்று நேற்று மாலை மணி 5.30 வாக்கில் அவர்களிடம் கொடுக்கப்பட்டது.
நேற்று காலை நஜிப்பின் சிறப்பு அதிகாரி ரவின் பொன்னையா அவர்களைச் சந்தித்த போது பிரதமருடனான சந்திப்புக்கு இணக்கம் காணப்பட்டது.
என்றாலும் அந்தக் கடிதத்தில் வீடுகளைக் கட்டிக் கொள்வதற்காக போராட்டக்காரர்கள் கோரியுள்ள 4 ஏக்கர் நிலம் பற்றி அந்தக் கடிதத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் வாரிசுகள் ஆவர். அவர்களை வெளியேற்றப் போவதாக பல ஆண்டுகளாக கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் மிரட்டி வருகிறது.
அரசாங்கம் தனியார் துறை மேம்பாட்டாளர்களுக்கு தாங்கள் வசிக்கும் நிலத்தை சிறிது சிறிதாக விற்றதைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தைத் தொடங்கினர்.
தாங்கள் வெளியேற்றப்படுவதற்கு ஈடாக குறைந்த விலை அடுக்கு மாடி வீடுகளை வழங்க அரசாங்கம் முன் வந்ததை அந்த போராட்டக்காரர்கள் நிராகரித்துள்ளனர்.