இலஞ்சம் வாங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதி நேபாளத்தில் சுட்டு கொலை

நேபாள உச்ச நீதிமன்ற நீதிபதி ராணா பகதூர் பாம், அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

நேபாள உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் ராணா பகதூர் பாம், (வயது 64). இவர்  மூன்று குற்றவாளிகளை விடுவிக்க இலஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக, இவர் மீது, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இது தொடர்பான விசாரணைக்கு இவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். தற்போது, நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டுள்ளது. இதனால், இவர் மீதான கண்டன தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில், ராணா பகதூர், காத்மாண்டுவில் சங்கமூல் என்ற இடத்தில் உள்ள பாக்ளாமுகி கோவிலுக்கு, தனது பாதுகாவலருடன் காரில் சென்றார்.

அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், இவர் மீது கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் படுகாயமடைந்த ராணா பகதூர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். படுகாயமடைந்த இவரது பாதுகாவலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.இந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு உத்தரவிடும்படி உள்துறை அமைச்சரை, அந்நாட்டு தலைமையமைச்சர் பாபு ராம் பட்டாரை கேட்டுள்ளார்.