போலீஸ் சுட்டுக்கொன்றதில் பல சந்தேகங்கள்

ஏப்ரல் 14இல் கொள்ளையர் என்று சந்தேகிக்கப்பட்ட மூவரைச் சுட்டுக்கொன்றதற்கு போலீஸ் கூறும் காரணம் ஏற்புடையதாக இல்லை என்கிறார் பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன். சுய-தற்காப்புக்காக சுட வேண்டியிருந்தால் கைகால்களில் சுட்டுக் காயப்படுத்தி இருக்கலாமே என்றவர் கூறினார்.

அன்றைய தினம் அய்டி நூர் ஹபிசால் ஒத்மான் அவரின் சகோதரர் நூர் அஸ்மான் ஒத்மான் அவர்களின் நண்பர் அஹ்மட் செளபா அஹ்மான் ஆகிய மூவரையும் காரில் விரட்டிச் சென்ற போலீசார் செராஸ் பில்லியன் சுற்றுவட்டத்தில் அவர்களைச் சுட்டுக்கொன்றனர்.

மூவரும்,எப்ரல் 6-இல், ஷா ஆலம் நகைக்கடை கொள்ளையில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்ற அவர்கள், தாங்கள் ஓட்டிசென்ற கார் வேறு கார்களுடன் போதிக்கொண்டதும் போலீசாரை நோக்கிச் சுடத் தொடங்கினர் என்று மாநகர் சிஐடி தலைவர் கூ சின் வா கூறினார்.

போலீஸ் திருப்பிச் சுட்டதில் இருவர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். இன்னொருவர் கோலாலம்பூர் மருத்துவமனையில் இறந்தார்.

கொல்லப்பட்ட மூவரின் உறவினர்கள் போலீஸ் கூறிய காரணத்தை ஏற்கவில்லை.நீதி வேண்டும் என்ற கோரிக்கையுடன் நேற்று அவர்கள் டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அவர்களுடன் சுதந்திரத்துக்குப் போராடும் வழக்குரைஞர்கள் அமைப்பைச் சேர்ந்த லத்திபா கோயாவும் சுரேந்திரனும் சென்றிருந்தனர்.

அய்டி, அஸ்மான் ஆகியோரின் தந்தை ஒத்மான் யூசுப்பை (வலம்) போலீஸ் நிலையத்துக்கு வெளியில் சந்தித்தபோது தம் பிள்ளைகளின் உடலில் முறையே 11, 8 துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்ததாகக் கூறினார். 

“அவர்களைப் பிடிப்பதாக இருந்தால் ஓட விடாமல் தடுத்திருக்கலாமே.உயிரை ஏன் எடுக்க வேண்டும்?”, என்றவர் வினவினார்.

‘போலீசின் கொலைமுயற்சி’

சந்தேகத்துக்குரியவர்களைச் சுட்டுக்கொன்றதை விளக்கி அதை நியாயப்படுத்தும் போலீசின் முயற்சியைச் சாடிய சுரேந்திரன், இதுபோன்ற சம்பவம் நிகழும்போதெல்லாம் இதேபோன்ற காரணம்தான் கூறப்படுகிறது என்றார்.

“தற்காப்புக்காகத்தான் செய்தார்கள் என்றால் இறந்தவர்களின் உடலில் இத்தனை துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் எப்படி வந்தன? கையிலோ காலிலோ சுட்டிருக்கலாமே.

“ஒருவர் இருவர் என்றில்லாமல் எல்லாருமே சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்களே, அது எப்படி?”, என்றவர் வினவினார்.

“இது போலீசார் அவர்களைத் தடுத்துநிறுத்த முயலவில்லை கொலை செய்யத்தான் முயன்றனர் என்பதைக் காண்பிக்கிறது.”

சமூகப் போராட்டவாதியுமான சுரேந்திரன், 2008-இலிருந்து போலீஸ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பெருகி வருவதையும் சுட்டிக்காட்டினர்.

“முன்பெல்லாம், ஆண்டுக்கு 10, 20பேர் சுட்டுக் கொல்லப்படுவார்கள்.ஆனால், அந்த எண்ணிக்கை 2008-இல் 82ஆகவும் 2009-இல் 88 ஆகவும் உயர்ந்தது”, என்றாரவர்.

இறந்துபோனவர்களின் குடும்பத்தாரும் வழக்குரைஞர்களும் அவ்விவகாரத்தைப் புலன் விசாரணை செய்ய புக்கிட் அமானில் தனி விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதுவரை அச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட போலீசார் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்.

இணக்கமான பதில் கிடைக்கும்வரை தங்கள் போராட்டம் ஓயாது என்றவர்கள் குறிப்பிட்டனர்.

TAGS: