பெர்சே: வாக்காளர் பட்டியலை உடனடியாத் தூய்மை செய்ய வேண்டும்

வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்த வேண்டும் என பெர்சே விடுத்த முதல் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிறைவேற்றத் தவறி விட்டதாக அந்தக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

“பொது மக்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்த போதிலும் வாக்காளர்களைப் புதுப்பிப்பதிலும்வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வதிலும் தொடர்ந்து முனைப்புக் காட்டவில்லை,” என பெர்சே வழிகாட்டல் குழு கூறியது.

“எனவே பெர்சே 2.0 விடுத்த வாக்காளர் பட்டியலைத் தூய்மை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற இசி என்னும் தேர்தல் ஆணையம் தவறி விட்டது.”

மெராப் எனப்படும் மலேசிய வாக்காளர் பட்டியல் ஆய்வு திட்ட இயக்குநர் ஒங் கியான் மிங் சுட்டிக் காட்டியிருப்பது போல வசிப்பிடத்தில் இல்லாத 3.1 மில்லியன் வாக்காளர்கள் இருக்கக் கூடும்.அதனைத் தூய்மை செய்ய வேண்டும்.”

தீவகற்ப மலேசியாவில் தங்களுடைய வாக்களிப்புத் தொகுதியுடன் ஒத்துப் போகாத அடையாளக் கார்டு முகவரிகளுடன் 3.1 மில்லியன் வாக்காளர்கள் இருப்பதை ‘Projek SPR’ என்னும் ஆய்வின் வழி  தேசியப் ‘பதிவுத் துறை கண்டு பிடித்துள்ளது.

“2002ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில் தீவகற்ப மலேசியாவில் அப்போது இருந்த 8.3 மில்லியன் வாக்காளர்களில் 37 விழுக்காட்டினருக்கு குளறுபடிகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது,” என பெர்சே குழு இன்று விடுத்த அறிக்கை கூறியது.

வாக்காளர் பதிவுகளில் காணப்படும் பல குளறுபடிகள் பற்றி இன்னும் தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதையும் அது சுட்டிக் காட்டியது.

அவற்றுள் கிளந்தானில் அடையாளக் கார்டு முகவரியைக் கொண்ட ஒருவர் தாம் ஜோகூர் தங்காக்கில் வாக்காளராக பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டு பிடித்துள்ளார்.

இன்னொரு வாக்காளர் தமது தொகுதியை மம்பாவ்-விலிருந்து பாயா ஜெராஸுக்கு மாற்றுவதற்கு விண்ணப்பித்துக் கொண்டார். ஆனால் தாம் தாமான் மெலாத்தி மாநிலத் தொகுதியில் தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளதைக் கண்டு பிடித்தார்.
 
இதனிடையே ‘காலமாகி விட்டதாக’ இசி பிரகடனம் செய்துள்ள பெர்சே வழிகாட்டல் குழு உறுப்பினர் லியாவ் கோக் பா இன்னும் வாக்காளர் பட்டியலிலிருந்து விடுபட்டுள்ளார்.

“தங்கள் வாக்காளர் பதிவில் இது போன்ற தவறுகளை கண்டு பிடித்த வாக்காளர்களும் பெர்சே 2.0ஐ அணுகியுள்ளனர்.அவர்கள் ஏற்கனவே இசி-யிடம் புகாரும் செய்துள்ளனர்.”

“இசி தொடர்ந்து செய்து வரும் அந்தத் தவறுகளை மன்னிக்கவே கூடாது.காரணம் அத்தகைய தவறுகள் தங்கள் தொகுதியில் வாக்களிக்கும் உரிமையை அந்தப் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இழந்து விடுகின்றனர்,” என பெர்சே தெரிவித்தது.

13வது பொதுத் தேர்தலில் தூய்மையாக இருக்க வேண்டுமானால் “நடப்பு இசி குழு உடனடியாக அகற்றப்பட்டு, புதிய ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும்,” எனவும் அது வலியுறுத்தியது.

தேர்தல் நடைமுறைகள் மீது பொது மக்களுடைய நம்பிக்கை என்றுமில்லாத அளவுக்கு குறைந்துள்ளதை அண்மைய கருத்துக் கணிப்பு காட்டியுள்ளதையும் பெர்சே குழு சுட்டிக் காட்டியது.

“தேர்தல் நடைமுறைகளை சீர்படுத்துவது மீது நாங்கள் தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு போதுமான அவகாசத்தையும் வழங்கியுள்ளோம். அதற்கு ஒத்துழைப்பும் வழங்கியுள்ளோம். ஆனால் விளைவுகள் ஆக்கப்பூர்வமாக இல்லை. அதற்கு மாறாக நிலைமை மோசமடைந்து கொண்டிருக்கிறது.”