எதிர்த்தரப்புக் கூட்டணியான பக்காத்தான் ராக்யாட் அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் மலாய் முஸ்லிம் ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவார் என பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்இன்று கூறியிருக்கிறார்.
நியமிக்கப்படும் தலைவர் அதிகமான செல்வாக்கைக் கொண்ட பிரிவைச் சேர்ந்த தனிநபராக இருக்க வேண்டும் என்று கூறிய அவர், இந்த நாட்டில் மலாய் முஸ்லிம்களே பெரும்பான்மையாக இருப்பதாகச் சொன்னார்.
“நாங்கள் பக்காத்தான் ராக்யாட் தீர்மானம், அரசமைப்பு, கூட்டரசின் அதிகாரத்துவ சமயம் இஸ்லாம், பூமிபுத்ரா உரிமைகள், மலாய் அதிகாரத்துவ மொழி, அரசமைப்புக்கு உட்பட்ட அரசர் அமைப்பு முறை ஆகியவற்றின் அடிப்படையில் நாங்கள் செயல்படுகிறோம்.”
“நாங்கள் அந்த அம்சங்களுக்கு முதலிடம் கொடுக்கிறோம். அதை விட வேறு ஒன்றும் இல்லை. நாங்கள் அந்த வாக்குறுதியுடன் முன்னேறுகிறோம். நாங்கள் எதனையும் அவசரப்பட்டுச் செய்ய விரும்பவில்லை,” என்றார் பாஸ் தலைவர்.
அலோர் ஸ்டாருக்கு அருகில் கோத்தா சாராங் செமுட்-டில் “Himpunan Hijau ke Putrajaya” ( புத்ராஜெயாவை நோக்கி பச்சைப் பேரணி) தொடர்பில் நிருபர்களிடம் பேசினார்.
இதனிடையே இந்த நாட்டுக்குத் தலைமை தாங்கும் எண்ணம் தமக்கு இல்லை என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளதாக பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி கூறினார்.
“அரசமைப்பு மௌனமாக உள்ளது. நாங்கள் (எதிர்த்தரப்பு கூட்டணி) பிரதமர் மலாய் முஸ்லிமாக இருக்க வேண்டும் என நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம்,” என்றார் அவர்.
அந்தப் பேரணியில் பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட், கெடா மந்திரி புசாரும் கெடா பாஸ் ஆணையருமான அஜிஸான் அப்துல் ரசாக் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
பெர்னாமா