சரவாக் விடுதலை வானொலி அறிவிப்பாளர் பீட்டர் ஜான் ஜாபான், விசாரணைக்காக போலீசார் தம்மை கைது செய்யக் கூடும் என அஞ்சி மறைவாக வாழ்வதாக அந்த வானொலி கூறியுள்ளது.
ஜாபானிடமிருந்து தனக்கு இது வரையில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை எனக் கூறிய அந்த வானொலி நிலையம், அந்த அறிவிப்பாளர் தற்போது மிரியில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருப்பதாக தனக்கு செய்தி கிடைத்துள்ளதாக அது குறிப்பிட்டது.
“அது எங்களுக்கு ஊக்கமூட்டும் செய்தியாகும். அதனால் கோத்தா கினாபாலு விமான நிலையத்தில் போலீசார் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து தாம் சரவாக்கிற்குள் சென்றால் மேலும் விசாரிக்கப்படலாம் என அஞ்சியிருக்கலாம் என்ற முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம்.”
கடந்த வியாழக்கிழமை மிரி விமான நிலையம் சென்றடைந்த ஜாபானை போலீஸ் குழு ஒன்று எதிர்கொண்டது. ஆனால் என்ன செய்வது என போலீசாருக்கு உத்தரவிடப்படாததால் அவரை வெளியே கொண்டு செல்வதில் அவரது வழக்குரைஞர்கள் வெற்றி கண்டனர்.
அவர்கள் மிரி நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது ஒரு காரில் வந்த அடையாளம் தெரியாத மூவர் அவர்களை நிறுத்தினர். அதற்கு பின்னர் ஜாபான் வழக்குரைஞர்களிடம் எதுவும் சொல்லாமல் அந்த மூவருடன் புறப்பட்டுச் சென்று விட்டார்.
போலீசார் ஜாபானை தடுத்து வைத்துள்ளதாக முதலில் கருதப்பட்டது. ஆனால் அதிகாரிகள் அதனை மறுத்துள்ளனர்.
“ஜாபானைத் தடுத்து வைப்பதற்கான உத்தரவு ஏதும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என மிரி போலீசார் கூறியுள்ளனர்.”
என்றாலும் அவர் எங்கு சென்றார் என்பது மீது குழப்பம் நிலவுவதால் நாங்களும் அவரைத் தேடுகிறோம்,” என அவர்கள் தெரிவித்தனர்.
பிரிட்டனில் இயங்கும் சரவாக் விடுதலை வானொலி, சரவா அரசாங்கத்தை குறிப்பாக முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட்டை கடுமையான விமர்சனம் செய்து வருகிறது.