பெர்சே 2.0 பேரணியில் போலீஸ் அடக்குமுறை மீதான புலனாய்வு முடிக்கப்பட்டுள்ளது

பெர்சே 2.0 பேரணியின் போது போலீசார் அடக்குமுறையை கையாண்டதாக கூறப்படுவது மீது புலனாய்வு முற்றுப் பெற்றுள்ளது. அது தொடர்பான அறிக்கை விரைவில் அமைச்சரவைக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் தெரிவித்தார்.

அந்தப் புலனாய்வு மீது தேசியப் போலீஸ் படைத் தலைவர் இரண்டு முறை தமக்கு விளக்கம் அளித்துள்ளதாகவும் அவர் சொன்னார். பெர்சே 2.0 பேரணியின் போது போலீசாரின் அடக்கு முறை குறித்த புகார்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட ஆறு சிறப்புக் குழுக்கள் நடத்திய புலனாய்வின் அடிப்படையில் அறிக்கை அமைந்துள்ளது.

ஆனால் அந்த அறிக்கையின் விவரங்களை ஹிஷாமுடின் வெளியிடவில்லை. அடுத்த சில நாட்களில் தேசியப் போலீஸ் படைத் தலைவர் அது குறித்து தகவல் வெளியிடுவார் என்று மட்டும் அவர் கூறினார்.

அந்த அறிக்கை பொது மக்களுக்கு வெளியிடப்படுமா என்பது அதனை ஆய்வு செய்த பின்னர் அமைச்சரவை முடிவு செய்யும்.

“அது அமைச்சரவை, போலீஸ் ஆலோசனைகளை சார்ந்துள்ளது. கூடிய வரை அது பொது மக்களுக்கு வெளியிடப்பட்டு வெளிப்படையாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்,” என அவர் முன்னாள் போலீஸ் அதிகாரிகள் சங்க உறுப்பினர்களைச் சந்தித்த பின்னர் நிருபர்களிடம் பேசினா.

கடந்த ஜுலை 9ம் தேதி நிகழ்ந்த பெர்சே 2.0 பேரணியின் போது போலீசார் கோலாலம்பூரில் பல இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதுடன் நீரையும் பாய்ச்சியதாக புகார்கள் கூறப்பட்டதைத் தொடர்ந்து அவற்றை விசாரிக்க ஆறு குழுக்களை அமைத்துள்ளதாக போலீசார் அறிவித்தனர்.

TAGS: