பரம்பரை அரசியல் வேண்டாம் என அஸ்மின் பிகேஆர்-க்கு அறிவுரை

14 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனி மனிதனுடைய அரசியல் போராட்டத்தின் விளைவாக உதயமானது பிகேஆர் கட்சி ஆகும். அது இன்னமும் அந்த மனிதரான கட்சியின் மூத்த தலைவரான அன்வார் இப்ராஹிமையே வலம் வந்து கொண்டிருக்கிறது.

அந்தக் கட்சியில் அன்வார் மனைவி டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் கட்சித் தலைவராகவும் புதல்வி நுருல் இஸ்ஸா உதவித் தலைவராகவும் இருந்து வருவதால் பரம்பரை அரசியல் தொடர்பில் அவர்கள் மீது கடுமையாகக் குறை கூறப்பட்டு வருகிறது.

அந்த பரம்பரை அரசியல் முறை வேண்டாம் என அண்மையில் மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் அதன் துணைத் தலைவர் அஸ்மின் அலியும் அறிவுரை கூறியுள்ளார்.

அன்வார் குடும்ப உறுப்பினர்கள் தங்கள் பதவிகளுக்கு ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் போட்டி அம்னோ கட்சியில் மலிந்துள்ளதாகத் தாம் கூறும் “நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உதவும் போக்கு” என்ற வலைக்குள் பிகேஆர் சிக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம் என்றார் அவர்.

“நாம் தெளிவான கோட்பாடுகளைக் கொண்டுள்ளதால் “நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உதவும் போக்கு” பிகேஆருக்குள் ஊடுருவாமல் இருப்பதற்கு கவனமாக இருக்குமாறு நான் கட்சித் தலைமைத்துவத்திற்கு அறிவுரை கூறுகிறேன்.”

“கட்சி அல்லது மாநில அல்லது கூட்டரசு முடிவுகளில் குடும்பச் செல்வாக்கு ஆதிக்கம் செலுத்துவதைக் காண நான் விரும்பவில்லை. தலைமைத்துவத்திற்கு நான் கொடுக்கும் ஏன் எனக்கும் கூட தெரிவித்துக் கொள்ளும் அறிவுரை அதுதான்.”

இதனைப் பல முறை வலியுறுத்திய அஸ்மின், பிகேஆர்-ரில் தமது குடும்பச் செல்வாக்கு ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க மாட்டார் என்பதில் தாம் மிக்க “நம்பிக்கையுடன்” இருப்பதாக கூறினார்.

அன்வார் அம்னோவில் இருந்தபோது அதே விஷயத்தை எதிர்த்திருப்பதே தமது நம்பிக்கைக்குக் காரணம் என்றும் அஸ்மின் சொன்னார்.

“பிகேஆர்-ல் இது வரை அது போன்று நடந்தது இல்லை. 1998ம் ஆண்டு தொடக்கம் ரிபார்மசி இயக்கத்தில் நுருல் ஆற்றியுள்ள துணிச்சலான பங்கிற்காக அவரைக் கட்சி அங்கீகரித்துள்ளது. அவருக்கு கட்சித் தலைவரோ அல்லது மூத்த தலைவரோ எந்த உந்துதலும் கொடுக்கவில்லை.”

“அது மிகவும் நல்லது. இறைவனுக்கு நன்றி. அவர் சட்டப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்,” என்றும் அஸ்மின் குறிப்பிட்டார்.

மந்திரி புசார் பதவியைக் குறி வைத்துள்ளாரா ?

அஸ்மின் தம்முடைய மாநில, நாடாளுமன்றத் தொகுதிகள் இரண்டையும் தக்க வைத்துக் கொள்ள முயலுவாரா என்றும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் மழுப்பலாக பதில் அளித்தார்.

சிலாங்கூரை பக்காத்தான் தக்க வைத்துக் கொண்டால் சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் தமது பதவியில் தொடர்ந்து இருப்பாரா என்ற கேள்விகளுக்கு அஸ்மின் எங்கு போட்டியிடுவார் என்பதைப் பொறுத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அந்த யோசனைகளை புன்னகையுடன் நிராகரித்த அவர்,” இல்லை. அப்படி ஒன்றும் இல்லை வதந்திகளுக்குச் செவி சாய்க்க வேண்டாம். சரியா ? உண்மையில் அது தொடரும் நடைமுறையாகும். நாங்கள் வேட்பாளர் பட்டியலை மீண்டும் பரிசீலிக்க கூடுகிறோம்.”

“இரண்டு இடங்களிலும் நான் போட்டியிடுவதா அல்லது குறிப்பிட்ட ஒர் இடத்தில் மட்டும் போட்டியிடுவதா என்பதை முடிவு செய்யும் பொறுப்பை நான் தலைவரிடமும் மூத்த தலைவரிடமும் விட்டு விடுகிறேன். எனக்கு எதுவாக இருந்தாலும் சரிதான்.”

 

TAGS: