துணைப் பிரதமர்: பெர்சே 3.0 பொதுத் தேர்தலுக்குப் பிந்திய குழப்பத்துக்கு ஆயத்தம்

பக்காத்தான் ராக்யாட் அடுத்த பொதுத் தேர்தலில் தோல்வி கண்டால் வன்முறை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ள கருத்தை துணைப் பிரதமர் முஹைடின் யாசின் ஆதரிக்கிறார்.

கோலாலம்பூரில் பிஎன் தேர்தல் எந்திரத்தை முடுக்கி வைத்துப் பேசிய அவர்,” பெர்சே 3.0 பேரணி தேர்தலுக்குப் பிந்திய குழப்பத்துக்கு ஆயத்தம் என்றும் அது பக்காத்தானின் “விரிவான வரைபடம்” என்றும் சொன்னார்.

தேர்தல் நடைமுறைகளை மேம்படுத்த அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதால் பெர்சே 3.0 தேவையற்றது என அவர் சொன்னார்.

“அவை அனைத்தும் மேற்கொள்ளப்பட்ட பின்னரும் அவர்கள் ஏன் பெர்சே 3.0ஐ நடத்தினார்கள் ? ஒரு வேளை மகாதீர் சொல்வது சரியாக இருக்கலாம். எதிர்க்கட்சிகள் தாங்கள் எதிர்பார்க்கும் ஆதரவைப் பெறாவிட்டால் என்ன செய்வது, அதற்காக அரசாங்கத்தைப் பற்றித் தவறான தோற்றத்தைத் தருவதற்கு அவை முயற்சி செய்கின்றன.”

“இது மனோதத்துவப் போர் என நான் நினைக்கிறேன். நமது தேர்தல் முறைகள் தூய்மையானதாக இல்லை என்ற குற்றச்சாட்டுக்களை அவை பரப்புகின்றன. மக்களைத் தூண்டி விடுகின்றன. ஆகவே நாம் வெற்றி பெற்றதும் அந்தத் தேர்தல் சட்டப்பூர்வமானது அல்ல என அவை அறிவிக்க முடியும்.”

“மத்திய கிழக்கில் நடைபெற்றதைப் போன்று அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக அவை மக்களை ஒன்று திரட்டி சாலைகளில் ஆர்ப்பாட்டம் செய்யுமாறு தூண்டும்,” என்றார் அவர்.

மகாதீர் முதன் முதலாக அந்த விஷயத்தை தமது மே 4ம் தேதி வலைப்பதிவில் எழுப்பினார். அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தேர்தலில் மோசடிகள் நிகழ்ந்துள்ளதாகக் கூறி பிஎன் -னை வீழ்த்துவதற்கு அரபு பாணியிலான ஆர்ப்பாட்டங்களில் பக்காத்தான் ஈடுபடும் என மகாதீர் அதில் ஆரூடம் கூறியிருந்தார்.