இணையம் மீது அரசாங்கத்துக்கு போதுமான கட்டுப்பாடுகள் இல்லாதது பற்றி மீண்டும் சிந்திக்குமாறு இந்த நாட்டின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கேட்டுக் கொண்டுள்ளார்.
நியூ சண்டே டைம்ஸ் ஏட்டுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
மகாதீர், இணையத் தணிக்கை ஏதும் இருக்காது என்பதை உறுதி செய்வதில் முக்கியப் பங்காற்றியுள்ளார். அந்தக் கொள்கை இன்னும் அமலில் இருக்கிறது. அந்த நேரத்தில் தாம் உலக அளவிலான இணைய வலையின் வலிமையை அறிந்திருக்கவில்லை என்றார் அவர்.
“இணையத்தில் தணிக்கை இருக்காது என இருக்கக் கூடாது என நான் சொன்ன போது நான் உண்மையில் இணையத்தின் வலிமையை உணரவில்லை. தார்மீக நெறிமுறைகளை கீழறுப்புச் செய்வதற்கு அதற்கு உள்ள ஆற்றலை நான் அறியவில்லை. மக்களைத் தூண்டுவதற்கும் பிரச்னைகளை உருவாக்குவதற்கும் அதற்கு உள்ள திறன் எனக்குத் தெரியவில்லை,” என அவர் அந்த நாளேட்டிடம் கூறினார்.
எடுத்துக்காட்டுக்கு கடந்த காலத்தில் ஆபாச சஞ்சிகைகளை தடை செய்து விட முடியும். ஆனால் இப்போது இணையத்தின் வழியாக அவற்றை எளிதாக பெற்று விட முடியும் என்றார் அவர்.
“இப்போது எல்லாம் ஓட்டையாக இருக்கிறது. நம் நாட்டுக்குள் அழுக்குகள் வருவதை நாம் தடுக்க முடியாமல் இருக்கிறோம்.”
“இணையத்தின் மூலம் வரும் அழுக்கை வடிகட்டுவதற்கான வழிகளைக் கண்டு பிடிப்பதற்கு நாடுகள் அனுமதிக்கப்பட வேண்டும்,” என அவர் சொன்னார்.
சுய கட்டுப்பாடு நல்லது என்றாலும் ‘அமலாக்கத்திற்கும் தண்டிப்பதற்கும் சில அதிகாரங்கள்” தேவை என்றார் அவர்.
மகாதீர் தாம் பதவியில் இருந்த காலத்தில் பல்லூடகப் பெருவழித் திட்டத்தை அறிமுகம் செய்தார். அப்போது அதில் அந்நிய முதலீட்டாளர்களைக் கவருவதற்காக இணையத் தணிக்கை இருக்காது என்பது உட்பட 10 வகையான உத்தரவாதங்களையும் அறிவித்தார்.
அந்த நடவடிக்கையின் விளைவாக இணையத்தில் தகவல்கள் சுதந்திரமாக வெளியிடப்பட்டன. அதனால் அரசாங்கத்தின் ‘கட்டுக்குள்’ இருந்த பாரம்பரிய ஊடகங்கள் பாதிக்கப்பட்டன.