“குடியுரிமை போன்ற மிக முக்கியமான விஷயங்களில் கூட தேசியப் பதிவுத் துறை தலைமை இயக்குநர், சர்ச்சைக்குரிய குடியுரிமை அங்கீகாரங்கள் குறித்து விளக்கமளிக்க அஞ்சுவது ஏன்?”
கணினி முறை மேம்படுத்தப்பட்ட போது பச்சை அடையாளக் கார்டுகளை வைத்திருந்தவர்கள் காணாமல் போய் விட்டனர்
டிகேசி: கணினி முறையை மேம்படுத்துவது என்பது தேசியப் பதிவுத் துறையின் கணினி இணைய முறைகள் எல்லாத் தரப்புக்களுக்கும் வெளிப்படையாக இருப்பது மேலும் குறையும். அது பெரிய பின்னடைவு ஆகும். தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சி கண்ட நாடாகத் திகழ மேற்கொள்ளப்படும் முயற்சிகளை கேலிக் கூத்தாக்குகிறது.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து பல குளறுபடிகளை அம்பலப்படுத்தினால் அதிகாரத்துவ ரகசிய சட்டத்தைக் கூட அவர்கள் பயன்படுத்தக் கூடும். ஏனெனில் காரணங்களை புதிது புதிதாகக் கண்டு பிடித்துக் கொண்டிருக்க முடியாது.
நாங்கள் விசாரிப்போம்: இது பெரிய சதி. எதிர்க்கட்சிகளை ஆதரிக்கும் குடிமக்கள் எண்ணிக்கையைக் குறைக்கும் நீண்ட காலத் திட்டத்தில் அம்னோ இறங்கியுள்ளது. அதற்காக அது இந்தோனிசியர்களுக்கும் பிலிப்பினோக்களுக்கும் பர்மியர்களுக்கும் தாய்லாந்துக்காரர்களுக்கும் குடியுரிமை வழங்குகிறது.
பூமிபுத்ரா-பூமிபுத்ரா அல்லாதார் கோட்பாடு இளைய தலைமுறையினரிடம் செல்லாது என்பதை அம்னோ புரிந்து கொண்டுள்ளது. காரணம் எதிர்க்கட்சிகளை ஆதரிக்கும் மலாய்க்காரர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது.
தங்களை இன வீரர்கள் என அழைத்துக் கொள்ளும் – மசீச, கெரக்கான், மஇகா ஆகியவை அந்த மாற்றத்தை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. அவற்றின் தலைவர்கள் அரசியல் ரீதியிலான அஸ்தமனத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர்.
இன அடிப்படையிலான அரசியலும்/அரசியல் கட்சிகளும் நமக்கு இன்னும் தேவையா? அன்புள்ள மலாய் சகோதர சகோதரிகளே அம்னோ உங்களுக்குத் துரோகம் செய்து கொண்டிருக்கிறது. இன அடிப்படை அரசியல் இனி வேண்டாம் எனச் சொல்லுங்கள்.
இனம் முக்கியமல்ல. நாடு என்னும் முறையில் நாம் வலிமையாக இருக்க வேண்டும்.
ஜோசபின்: எல்லா முரண்பாடுகளுக்கும் விளக்கம் தருவது எளிது. அது பதிவுக் கோளாறு அல்லது புள்ளி விவரம் மேம்படுத்தப்படவில்லை எனச் சொல்லிக் கொண்டே போகலாம். அது தேசியக் குடிமக்கள் புள்ளிவிவரக் களஞ்சியமாகும். அதனால் கூடுதல் விளக்கம் தேவை.
ஆகவே குடியுரிமை வழங்கப்படுவதற்கு தேசியப் பதிவுத் துறை பின்பற்றுகிற நடைமுறைகளை ஆய்வு செய்ய அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.
கணினியில் சில பொத்தான்களை தட்டுவதின் மூலம் ஒருவருடைய தகுதியை மாற்ற இயலும் என்றால் தேசியப் பதிவுத் துறை வெளிப்படையாக இருக்க வேண்டும்.
பெர்ட் தான்: குடியுரிமை போன்ற மிக முக்கியமான விஷயங்களில் கூட தேசியப் பதிவுத் துறை தலைமை இயக்குநர், அந்நியர்களுக்கு அதுவும் குறிப்பாக எந்தத் தகுதியும் இல்லாத இந்தோனிசியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய குடியுரிமை அங்கீகாரங்கள் குறித்து விளக்கமளிக்க அஞ்சுவது ஏன்?
அக்டோபர் மாதம் நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது. 2008ம் ஆண்டு தொடக்கம் வழங்கப்பட்டுள்ள குடியுரிமை அங்கீகாரங்களின் எண்ணிக்கையைப் பற்றி எம்பி-க்கள் உள்துறை அமைச்சரிடம் கேட்க வேண்டும். அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், அவர்களுடைய கல்வித் தகுதிகள் ஆகியவற்றையும் கேட்க வேண்டும்.
ஜேபி மனிதன்: குறிப்பிட்ட தனி நபர்களுக்கு குடியுரிமையை தேசியப் பதிவுத் துறை இவ்வளவு வேகமாக வழங்குவது உண்மையில் அப்பட்டமான அதிகார அத்துமீறல். இங்கு பிறந்து வளர்ந்து வேலை செய்யும் பல மலேசியர்கள் குடியுரிமை பெறப் போராடுகின்றனர்.
அந்நியர்கள் குறிப்பாக இந்தோனிசியாவையும் பிலிப்பீன்ஸையும் சார்ந்தவர்களுக்கு மிக எளிதாக குடியுரிமை கொடுக்கப்படுகிறது. பல விசுவாசமான மலேசியர்கள் குடியுரிமை கிடைக்காமலேயே மடிந்துள்ளனர். அதற்கான காரணம் உள்துறை அமைச்சருக்கும் தேசியப் பதிவுத் துறைக்கும் மட்டுமே தெரியும்.