‘பரம்பரை அரசியலுக்கு’ எதிராக பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறியுள்ள கருத்துக்கள் காகம் குயிலைப் பார்த்து கறுப்பு எனச் சொன்ன கதையைப் போன்று இருப்பதாக மசீச சாடியுள்ளது.
“அந்த எதிர்க்கட்சிகளுக்குள் குடும்ப பிணைப்புக்கள்” மலிந்திருப்பதை அது சுட்டிக் காட்டியது. “பிகேஆர்-கட்சியின் தேர்வு செய்யப்படாத மூத்த தலைவர், இறைவனுடைய பரிசு அன்வார் இப்ராஹிம், அந்தக் கட்சியின் தலைவராக அவரது மனைவி டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயிலும் உதவித் தலைவராக அவரது புதல்வர் நுருல் இஸ்ஸாவும் உள்ளனர்,” என மசீச உதவித் தலைவர் சோர் சீ ஹியூங் விடுத்த அறிக்கை கூறியது.
தனது தலைமைத்துவ அணியில் இத்தகைய பரம்பரை அம்சங்கள் காணப்படும் போது பிகேஆர் தான் சொல்வதைச் செய்ய வேண்டும். அத்துடன் தனது தோழமைக் கட்சிகளுக்கும் “அது போன்ற ஆலோசனைகளை” வழங்கவும் வேண்டும் என்றார் அவர்.
டிஏபி-யில் ‘தந்தை மகன் ஆட்சி’-யும் அதன் மத்திய செயற்குழுவில் பல முக்கியமான பதவிகளை தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் அலங்கரிப்பதும் காணப்படுவதாக சோர் மேலும் கூறினார்.
“டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், கட்சியின் மூத்த ஆலோசகர் லிம் கிட் சியாங்-கின் புதல்வர். தலைவர் கர்பால் சிங்-கின் இரண்டு புதல்வர்களான கோபிந்த் சிங்-கும் ஜக்தீப்-பும் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள்.”
“பேராக் டிஏபி தலைவர் ங்கே கூ ஹாம்-ன் இரும்புப் பிடியான ஆட்சிக்கு அவருக்கு நெருங்கிய உறவினரும் மாநில டிஏபி செயலாளருமான ங்கா கோர் மிங் உதவி செய்கிறார். அந்த உறவுகள் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.”
பாஸ் கட்சியிலும் அதே நிலைமையே என்றும் சோர் சொன்னார். அங்கு பாஸ் இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் நிக் அப்து நிக் அஜிஸ், அந்தக் கட்சியின் ஆன்மீக ஆலோசகர் நிக் அஜிஸ் நிக் மாட்-டின் புதல்வர் ஆவார்.
‘பக்காத்தான் வட கொரியாவைப் போன்றது’
பரம்பரை அரசியல் குறித்து அஸ்மின் வெளியிட்ட கருத்துக்கள் ‘இரட்டை நோக்கத்தை’ கொண்டுள்ளது எனத் தாம் எண்ணுவதாக வீடமைப்பு, ஊராட்சி அமைச்சருமான சோர் குறிப்பிட்டார்.
“எதிர்க்கட்சிகளை வட கொரிய நிலைக்கு வைத்துள்ள-பக்காத்தான் கட்சிகளில் நிலவும் பரம்பரை அரசியல் மீது மக்கள் வெறுப்படைந்துள்ள வேளையில் பிகேஆருக்குள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உதவும் போக்கு தலைதூக்கக் கூடாது என அஸ்மின் கட்சித் தலைமைத்துவத்தை எச்சரிக்கிறார்.”
“என்றாலும் சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிமிடமிருந்து போட்டியை எதிர்நோக்கும் அஸ்மின் தமது மதியுரையாளரான அன்வாரின் வெறுப்பை பெறாமால் இருப்பதற்காக பிகேஆரில் குடும்பச் செல்வாக்கு ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க மாட்டார் எனத் தாம் நம்புவதாக-ஒர் அபத்தமான நியாயத்தை முன் வைத்து அன்வாரைத் தற்காத்துப் பேசியிருக்கிறார்.”
இரண்டு பக்கமும் கூர்மையான அந்த அறிக்கை, ‘பக்காத்தான் கட்சிகளில் காணப்படும் பரம்பரை அரசியல்’ மீது பொது மக்கள் குறை கூறுவதை தவிர்ப்பதாகவும் சோர் மேலும் குறிப்பிட்டார்.