நான்கு பெர்சே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இன்று மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர்கள் மூவர் மீது கலவரத்தில் ஈடுபட்டதாகவும் ஒருவர் மீது படப் பிடிப்பாளர் ஒருவருக்குக் காயத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
வழக்குரைஞரான ஜி ராஜேஷ் குமார், ராசா பிகேஆர் தொகுதித் தலைவர் ஆர் தங்கம், பிகேஆர் உறுப்பினர் பார்ஹான் இப்ராஹிம் ஆகியோர் மீது கலவரம் செய்ததாக குற்றவியல் சட்டத்தின் 147வது பிரிவின் கீழ் குற்றம் சுமத்தப்ப்பட்டுள்ளது.
அதே வேளையில் அல் ஹிஜ்ரா படப் பிடிப்பாளரான முகமட் அஸ்ரி முகமட் சாலே-க்கு வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்தியதாக இன்னொரு ஆர்ப்பாட்டக்காரரான சாபுவான் மாமாட் மீது குற்றவியல் சட்டத்தின் 323வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
அந்த நால்வரும் கூடுதல் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர். கலவரம் தொடர்பான குற்றச்சாட்டை தாக்கல் செய்வதற்கு ஜுலை 2ம் தேதியை செஷன்ஸ் நீதிமன்றம் நிர்ணயம் செய்தது.
காயத்தை விளைவித்த குற்றச்சாட்டு மீதான விசாரணை செப்டம்பர் 4 முதல் 7 வரை நிகழும் என்றும் நீதிமன்றம் அறிவித்தது.