‘ஆர்ப்பாட்டங்கள் ஹராம் என இஸ்லாமிய சட்டம் சொல்லவில்லை’

ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணிக்குப் பின்னர் சில ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொள்வது முஸ்லிம்களுக்கு ஹராமானது என தேசிய பாத்வா மன்றம் பிரகடனம் செய்துள்ளதற்கு எதிராக பாஸ் கட்சியின் வலிமை வாய்ந்த சூரா ( syura ) மன்றம் சவால் விடுத்துள்ளது.

சமய அறிஞர்களும் கட்சி உயர் தலைவர்களும் அங்கம் பெற்றுள்ள அந்த சூரா ( syura ) மன்றத்துக்கு பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் தலைமை தாங்குகிறார்.

தூய்மையான, நியாயமான தேர்தல்களை வலியுறுத்தும் அந்தப் பேரணியில் முஸ்லிம்கள் கலந்து கொள்வது அவசியமானது என ஏற்கனவே அவர் கூறியிருக்கிறார்.

ஆர்ப்பாட்டங்கள் கத்தியைப் போன்றவை என குறிப்பிட்ட அந்த மன்றம், அதன் நோக்கம் அல்லது பயன்பாடுதான் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் மிக முக்கியமானது என அந்த மன்றம் தெரிவித்தது.

“அடிப்படையில் இஸ்லாமியப் போதனைகளில் சிறப்பான ஆதாரம் ஏதும் இல்லாததால் ஒர் ஆர்ப்பாட்டம் சட்ட விரோதமானதா, கட்டாயமானதா, தொண்டு அடிப்படையிலானதா அல்லது தடை செய்யப்பட்டதா என்பது மீது இஸ்லாமியச் சட்டம் ஏதுமில்லை,” என அது குறிப்பிட்டது.

“இஸ்லாமியச் சட்டம் நோக்கத்தைச் சார்ந்துள்ளது. நோக்கம் நல்லதாகவும் முக்கியமானதாகவும் இருந்தால் அது கட்டாயமானதாகவும் தொண்டு அடிப்படையிலானதாகவும் இருக்கலாம். நோக்கம் மக்களுடைய நலனுக்கு பங்காற்றாவிட்டால் அது சட்ட விரோதமாக அல்லது தடை செய்யப்பட்டதாக இருக்கலாம்.”

எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் ஆர்ப்பாட்டங்கள் இயல்பானவை எனவும் அந்த மன்றம் குறிப்பிட்டது. ஆர்ப்பாட்டங்கள் என்பது தங்கள் செய்தியை குறிப்பாக பேச்சு சுதந்திரம் ஒடுக்கப்படும் போது அரசாங்கத்திற்கும் சக குடிமக்களுக்கும் தெரிவிப்பதற்கு மக்கள் பயன்படுத்தும் வழிகள் ஆகும். 

இன்றைய மலேசிய சூழ்நிலையில் எகிப்தில் நடந்ததைப் போன்று கொடுங்கோன்மையை வீழ்த்துவதற்குச் சிறந்த வழிகளில் ஒன்று பெர்சே 3.0ன் குந்தியிருப்பு போராட்டம்,” என அது மேலும் தெரிவித்தது.

அது அமைதியாகவும் தூய்மையாகவும் எதிர்மறையான சக்திகள் ஏதுமின்றி சுதந்திரமாகவும் நடைபெற்ற ‘நல்ல ஆர்ப்பாட்டம்’ என்றும் பாஸ் சூரா மன்றம் குறிப்பிட்டது. சட்ட அமலாக்க அமைப்புக்களின் தூண்டுதலினால் அதற்குக் களங்கம் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் அது கூறியது.

எகிப்தில் அதிபர் ஹொஸ்னி முபாராக் அகற்றப்படுவதற்கு வழி வகுத்த ஆர்ப்பாட்டங்களின் தொடக்கத்தில் கண்டதைப் போன்று அது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதலுக்கு வழி வகுத்திருக்கக் கூடும். 

“என்றாலும் ஜனநாயக நாடு என்னும் சூழ்நிலையில் அமைதியான ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்கு ஆளும் கட்சி அரசாங்க எந்திரத்தைப் பயன்படுத்துவது குற்றமாகும். ஏனெனில் அரசாங்க எந்திரம் ஆளும் கட்சிக்கு மட்டும் சொந்தமானது அல்ல. ஆர்ப்பாட்டம் நடத்தும் மக்களுக்கும் அது சொந்தமானதாகும்.”

 

TAGS: