சிலாங்கூர் வாக்காளர்களை அடையாளம் காணும் நடவடிக்கையைப் புறக்கணிக்குமாறு இசி-யும் கேட்டுக் கொள்கிறது

‘Selangorku Bersih’ என்னும் இயக்கத்தின் கீழ் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள வாக்காளர்களுடைய அடையாளங்களை சரி பார்க்கும் அதிகாரம் அந்த மாநில அரசாங்கத்துக்கு இல்லை என இசி என்ற தேர்தல் ஆணையம் கூறுகிறது.

ஏற்கனவே அந்த நடவடிக்கையை புறக்கணிக்குமாறு சிலாங்கூர் மக்களை அந்த மாநில அம்னோ துணைத் தலைவர் நோ ஒமார் கேட்டுக் கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இசி துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் விடுத்துள்ள அறிக்கையிலும் பொது மக்கள் ஒத்துழைக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு வாக்காளர்களுடைய அடையாளங்களைச் சரி பார்க்கும் நடவடிக்கை வாக்காளர்களுக்கு தொந்தரவு கொடுத்து அவர்களிடையே பதற்றத்தை உருவாக்கி விடக் கூடும் என்று தாம் கவலைப்படுவதாகவும் அவர் சொன்னார்.

அந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடம் தங்களது அடையாளக் கார்டுகளைக் காட்டுவதா இல்லையா என்பதை முடிவு செய்யும் உரிமை பொது மக்களுக்கு இருப்பதாக வான் அகமட் வலியுறுத்தினார்.

“என்றாலும் தங்கள் அடையாளக் கார்டுகளை மற்றவர்களிடம் எளிதாகக் கொடுத்து விட வேண்டாம் என நான் வாக்காளர்களுக்கு அறிவுரை கூறுகிறேன்.”

வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்தும் நோக்கத்துடன் மாநில அரசாங்க ஊழியர்களையும் கிராம மேம்பாட்டு பாதுகாப்புக் குழுக்களின் உறுப்பினர்களையும் ஈடுபடுத்தும் அந்த நடவடிக்கையை அண்மையில் சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் தொடக்கி வைத்தார்.

அவர்கள் வீடு வீடாகச் சென்று அந்த முகவரிகளில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களுடைய அடையாளங்களை சரி பார்ப்பார்கள். வாக்காளர்களை கண்டு பிடிக்கத் தவறினால் அவர்கள் அது குறித்து ஆட்சேபமும் தெரிவிப்பார்கள்.

சிலாங்கூரில் வாக்காளர் எண்ணிக்கை பெரும் அளவு கூடியிருப்பதைத் தொடர்ந்து மாநில அரசாங்கம் அந்த நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. அந்நியர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது, மாநிலத்துக்குள் வெளி வாக்காளர்கள் கொண்டு வரப்பட்டுள்ளது உட்பட பல மோசடிகளும் முறைகேடுகளும் அதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என பக்காத்தான் ராக்யாட் கூறியுள்ளது.

அந்த நடவடிக்கையை நோ கடுமையாகக் குறை கூறியுள்ளார். வாக்காளர்களுடைய அடையாளங்களைச் சரி பார்க்கும் அதிகாரம் இசி-யின் கீழ் வருவதால் அது அதிகார அத்துமீறல் என அவர் வருணித்துள்ளார்.

நோ-வின் கருத்தை ஆதரித்த வான் அகமட் யாருடைய அடையாளத்தையும் உறுதி செய்வதற்கு அடையாளக் கார்டுகளைக் காட்டுமாறு யாரையும் கட்டாயப்படுத்தும் அதிகாரம் கிராம மேம்பட்டு பாதுகாப்புக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு இல்லையென  உத்துசான் மலேசியா நாளேட்டிடம் கூறினார்.

“போலீஸ் போன்ற அமலாக்க அமைப்புக்கள் மட்டுமே தங்களுடைய அடையாளக் கார்டுகளைக் காட்டுமாறு பொது மக்களுக்கு உத்தரவிடும் அதிகாரத்தைப் பெற்றுள்ளன.”

“ஆகவே பொது மக்கள் அந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்புத் தர மறுத்தால் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என சிலாங்கூரில் வாக்காளர்களுடைய அடையாளங்களைச் சரி பார்க்கும் பணியில் ஈடுபடும் கிராம மேம்பாட்டு பாதுகாப்புக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு நினைவூட்டப்படுகின்றது,” என அவர் சொன்னதாகவும் உத்துசான் செய்தி குறிப்பிட்டது.

அடுத்த பொதுத் தேர்தலின் போது குழப்பம் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக வாக்காளர்கள் தங்களது வாக்களிப்புத் தகுதியை சரி பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் பொருட்டு ஒரு மாத இயக்கத்தை இசி தொடங்கியுள்ளது.

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 03-88856565 என்ற தொலைபேசி எண்ணை அழைப்பதின் மூலமும் அனைத்து மாநில இசி அலுவலகங்களுடன் தொடர்பு கொள்வதின் மூலமும் அல்லது இசி இணையத் தளத்திலும் அல்லது  15888 என்ற எண்ணுக்கு “SPR(space)SEMAK(space)identity number” குறுஞ்செய்தி அனுப்புவதின் மூலமும் அதனைச் செய்யலாம்.

 

TAGS: