திருமணத்தின் போது நடனமாடிய பெண்களுக்கு மரண தண்டனை!

பாகிஸ்தானில், திருமணத்தின் போது நடனமாடிய நான்கு பெண்கள், கிராம பஞ்சாயத்தின் உத்தரவுப்படி, கொல்லப்பட்டு விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் கைபர் – பக்துன்க்வா மாகாணத்தில், பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்கு, அரசை விட கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்குத் தான், செல்வாக்கு அதிகம். இங்குள்ள கோகிஸ்தான் மாவட்டத்தில், பண்டோ பைதார் கிராமத்தில், இரண்டு மாதங்களுக்கு முன் திருமண நிகழ்ச்சி நடந்தது.

கிராமிய பாடல்கள் இசைக்க, திருமணத்துக்கு வந்த சில பெண்களும், ஆண்களும் நடனமாடினர். இவர்கள் நடனமாடிய காட்சிகள் எல்லாம், வீடியோவில் பதிவாகியிருந்தன. பஞ்சாயத்து தீர்ப்பு இந்த திருமண வீடியோவை, சீர்தய் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் அண்மையில் பார்த்தனர். தங்கள் கிராம பெண்கள், பக்கத்து கிராமத்தில் நடந்த விழாவில் நடனமாடிய காட்சிகளை பார்த்து கோபமடைந்தனர்.

நமது வழக்கப்படி, ஆணும் பெண்ணும் சேர்ந்து நடனமாடுவது, பெரிய குற்றம் எனக் கூறி, பஞ்சாயத்தை கூட்டினர். நடனமாடிய நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்களை கொல்லும் படி உத்தரவிட்டனர். இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு, 40 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளனர். தப்பிய ஆண்கள் இதன்படி, நான்கு பெண்களும் வீட்டிலிருந்து அழைத்து வரப்பட்டு, ஒரு இடத்தில் கட்டி வைக்கப்பட்டனர்.

இந்த செய்தியை கேள்விப்பட்ட இரண்டு ஆண்களும் தப்பி விட்டனர். நடனமாடியவர்களுக்கு, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தண்டனை நிறைவேற்றப்படலாம் என்பதால், அவர்களின் உறவினர்கள் காவல்துறையில் புகார் செய்துள்ளனர்.

இதையடுத்து, கோகிஸ்தான் மாவட்ட காவல்துறை அதிகாரி அப்துல் மஜித், சீர்தய் கிராமத்துக்கு சென்று, ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்ததாக கூறிய நபரை கைது செய்தார். நான்கு பெண்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், கிராம பஞ்சாயத்து தீர்ப்புப்படி, நடனமாடிய நான்கு பெண்களும் கொல்லப்பட்டு விட்டதாக, பாகிஸ்தான் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன. ஆனால், இந்த செய்தியை, கைபர் – பக்துன்க்வா மாகாண தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மறுத்துள்ளார்.