தேர்தல் ஆணையம்(இசி) கூறிக்கொள்வதுபோல் அல்லாமல், போதுமான விவரங்களைக் கொண்டிருந்த பதிவுப்பாரங்களை நிராகரிக்கும் அதிகாரம் அதற்கு உண்டு என்கிறது டிஏபி.
இன்று காலை அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங்கும் தேசிய பரப்புரைப் பிரிவுச் செயலாளர் டோனி புவாவும் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்ட பதிவுப்பாரங்களை காண்பித்தனர்.
வாக்காளர்கள் பாரங்களில் குறிப்பிட்ட முகவரிகள் அவர்களின் மைகார்ட் முகவரிகளுடன் ஒத்துப்போகாதது, வாக்காளர்கள் அவர்களின் சமயத்தைக் குறிப்பிடத் தவறியது அல்லது அவர்கள் குறிப்பிட்ட சமயம் மைகார்டில் பதிவாகியுள்ள சமயத்திலிருந்து மாறுபட்டிருந்தது முதலிய காரணங்களுக்காக அந்த விண்ணப்பப் பாரங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன.
அவை, இசியால் நியமனம் செய்யப்பட்ட டிஏபி உதவிப் பதிவாளர்களால் மாநில இசி அலுவலகத்தில் சமர்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட பாரங்களாகும்.
“பாரங்களில் விவரங்கள் முழுமையாக இல்லை என்பதால் நிராகரிக்கப்படுவதாக எங்களிடம் கூறினார்கள்.ஆக, நிராகரிப்பது அவர்களின் அதிகாரத்துக்கு உட்பட்டதுதான்”, என்று டோனி கூறினார்.
“எனவே, இசி தலைவர் அப்துல் அசீஸ் சொன்னதில் அர்த்தமில்லை. சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் பதிவுசெய்யப்பட்ட செயலைத் தற்காத்துப் பேசி அவர் அரசாங்கத்துக்கு ஆதரவாக நடந்து கொண்டிருக்கிறார்”.
நேற்று அப்துல் அசீஸ், போலியானதும் முழுமையற்றதுமான முகவரிகளை கொண்டுள்ள வாக்காளர்களின் பதிவை நிராகரிக்கும் அதிகாரம் இசி-க்கு இல்லை என்று மலேசியாகினியிடம் கூறியிருந்ததன் தொடர்பில் புவா இவ்வாறு கருத்துரைத்தார்.
அப் பதிவுகள் மீது உள்ளூர் மக்களிடமிருந்து ஆட்சேபம் இல்லாத நிலையில் அவை அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்பட்டு விட்டால் குறை கூறுகின்றவர்களுடைய கருத்துகளை வைத்து எதுவும் செய்ய இயலாது. பதிவு செய்த வாக்காளர்களே மாற்றங்களுக்கு விண்ணப்பித்தால் மட்டுமே மாற்றங்கள் செய்ய முடியும் என்றவர் கூறியிருந்தார்.